தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள்களின் விற்பனை மிக அதிகளவில் காணப்பட்டு வருகிறது. சட்டவிரோதமான இந்த விற்பனையை தடுத்து நிறுத்த போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தலைநகரான சென்னையில் போதைப்பொருளின் விற்பனை கவலையளிக்கும் விதத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள திருமங்கலம் அருகே அமைந்துள்ள பிரபல வணிக வளாகம் அருகே போதை மாத்திரை விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியைச் சுற்றிலும் அணணாநகர் துணை ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று அந்த வணிக வளாகம் அருகே வாலிபர் ஒருவர் அங்குமிங்கும் சுற்றித்திரிந்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. உடனடியாக அந்த வாலிபரை சோதனை செய்தனர். அப்போது, அவரிடம் போதை மாத்திரைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து, அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அந்த இளைஞர் அயனாவரத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ( வயது 28) என்று தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரீகாந்தைப் போலவே சாகுல் ஹமீது ( வயது 21) மற்றும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் டோக்கஸ் ( வயது 24) ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சாகுல் ஹமீது மற்றும் டோக்கஸ் என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை மாத்திரை விற்பனைக்கென இவர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், இந்த வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக இவர்கள் போதை மாத்திரை விற்பனைக்கென்று ஆர்டர் எடுத்து விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரை, போதை ஸ்டாம்புகள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு பட்டதாரி பெண் ஒருவர் போதை மாத்திரை விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
போதை விற்பனை தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்ட இடம் அருகே அமைந்துள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற மது விருந்தில் இளைஞர் ஒருவர் அளவுக்கு அதிகமான போதையால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்