சென்னை தாம்பரம் அருகே மணிமங்கலம் கிராமம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம் கூலி தொழிலாளி. இவரது மகன் தேவா என்கிற தேவேந்திரன் (25). அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைப்பது மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதுபோக அதே பகுதியில் வழிப்பறி உள்ளிட்ட தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அந்த ஏரியாவை தனது கண்ட்ரோலில் எடுத்து வர வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக தேவாவிற்கு இருந்து வந்ததாக  கூறப்படுகிறது. பி கிரேட் குற்றவாளியாக தேவா இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 



 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 31 தேதி இரவு  மணிமங்கலம் காவல் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மேல் தளத்தில் தேவேந்திரன் வெட்டி கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் "ஏரியாவில் யார் பெரிய ரவுடி" என சண்டையில் நண்பர்களே தேவாவை கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து கொலையில் ஈடுபட்ட மணிமங்கலம் பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (23), சுகன் (எ) சுரேந்தர் (20), புளிமூட்டை (எ) சதிஷ் (20), சுதாகர் (21), ரைசுல் இஸ்லாமுல் அன்சாரி (22) என்பது தெரியவந்தது. அதன்படி 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த விக்கி (எ) விக்னேஷ் (23), சுகன் (எ) சுரேந்தர் (20) ஆகிய இருவரும் சுற்றி திரிந்துள்ளனர்.



 

நேற்று இரவு மணிமங்கலம் காவல் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே நடந்து சென்றுள்ளனர். அப்போது 12 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் மடக்கி கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் தலை மற்றும் உடம்பு பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளனர். இதனைகண்ட மர்ம கும்பல் தப்பி ஓடியது. பின்னர் தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும்  இறந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . பழிக்கு பழியாக இந்த கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் இருரை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.