சென்னையை அடுத்த ஓட்டேரியில் குடிபோதையில் மகளிடம் அத்துமீறிய கணவரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சென்னையை அடுத்த ஓட்டேரியில் 21 வயது கல்லுாரி மாணவி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி, தம்பியுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஜனவரி மாதம் 27ம் தேதி இரவு, அம்மா, தம்பியுடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்ததார்.
அப்போது, தூக்கத்தில் இவரிடம் யாரோ அத்துமீறுவதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக யார் என்று முழித்து பார்த்தபோது அவரது தந்தையே குடிபோதையில் நிதானமில்லாமல் எல்லை மீறியுள்ளார். அந்த பெண்ணும் எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும், அவரால் அவரது தந்தையை தடுக்க முடியவில்லை. இதனால் தன்னை யாரேனும் காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளார்.
இந்த நிலையில், சத்தம் கேட்டு எழுந்த தாய் தன் கணவரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்து, தன் பங்குக்கு தடுக்க முயற்சி செய்துள்ளார். இது எதுவும் வேலைக்கு ஆகாததால் அருகில் இருந்த கத்தியை எடுத்து, தன் கணவரை தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த கணவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி காவல்துறையினர், கணவரை கொலை செய்த மனைவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீன் :
இதையடுத்து, ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாணவியின் தாய் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, 'மனுதாரரின் கண்முன்னே மகளிடம் தவறாக நடக்க முயற்சித்த கணவரின் செயலை தாங்க முடியாமல், ஆத்திரத்தில் ஆயுதத்தால் தாக்கியுள்ளார். திட்டமிட்டு செய்யவில்லை. மகளை காப்பாற்றும் எண்ணத்தில் மனுதாரர் நடந்துள்ளார். எனவே, ஜாமீன் வழங்கலாம். ஆட்சேபனை இல்லை' என்றார்.
இதை ஏற்ற நீதிபதி, 'மகளை பாதுகாக்கும் எண்ணத்தில்தான் மனு தாரர் செயல்பட்டுள்ளார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. விசாரணைக்கு தேவைப்படும் நேரத்தில், விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்; தலைமறைவாகக் கூடாது என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது' என்றார்.