நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் எனக் கேள்வி எழுப்பி ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. 



நடிகர் குஷ்பு ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இயங்கி வருபவர். இந்த நிலையில் அண்மையில் அவரது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ’ப்ரையன்’ என்கிற பெயருக்கு மாற்றப்பட்டது. மேலும் பல்வேறு தேவையற்ற ட்வீட்கள் அவரது கணக்கிலிருந்து தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டன. 






இதையடுத்து ட்விட்டர் கணக்கை முடக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபி மற்றும் சைபர் கிரைமில் புகாரளித்துள்ளதாகவும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். முன்னதாக குஷ்புவின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதன்படி அவரது ட்விட்டர் டிபியும், அவர் போட்டோவும் வித்தியாசமான உருவப் படத்துடன் மாற்றப்பட்டிருந்தது. briann என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவரது ட்விட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தன. இது தொடர்பாக இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் 710 பேரை குஷ்பு பின் தொடர்கிறார். 13 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரை பின் தொடர்கின்றனர்.


பல அரசியல் தலைவர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் குஷ்புவும் பல  கருத்துகளை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சினிமா பதிவுகள், குடும்ப பதிவுகள் மட்டுமின்றி அரசியல்சார்ந்த பல கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். பலமுறை அவரது பதிவுகள் காரசாரமான விவாதங்களை எழுப்பியுள்ளன. முன்னதாக திமுகவில் இருந்த குஷ்பு காங்கிரஸில் இணைந்தார். பின்னர் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்துள்ளார். குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சைபர் கிரைம் விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.