சென்னையில் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைதாகிய நபர் காவல்நிலையத்தில் சந்தேக மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துவரும் நிலையில் இதனை மறைக்கும் விதமாக போலீசார் ரூபாய் 1 லட்சம் பணத்தை மறைமுகமாகக் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் தலைமைச் செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு கெல்லீஸ் சிக்னல் அருகில் வாகனச்சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப்பதிலளித்துள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஆட்டோவைச் சோதனை செய்தப்போது அதில் கஞ்சா, மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் ஆட்டோவில் வந்த சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தான், ஏப்ரல் 19 ஆம் தேதி காலை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதற்கு முன்னதாக, காலையில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் மற்றும் சுரேஷ்க்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் விக்னேஷ்க்கு வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து இவரது உறவினருக்குத் தகவல் கொடுத்தநிலையில் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் விக்னேஷ் பட்டியலிடப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், காவலில் வைக்கப்பட்ட மரணம் 1989-ஆம் ஆண்டு பட்டியல் சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989-ன் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை உறவினர்கள் முன்வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட விக்னேசின் உடலைப் பலத்த போலீசார் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டுள்ளது. இருந்தப்போதும் சந்தேகிக்கும்படியாக காவல்நிலையத்தில் ஏற்பட்ட மரணம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதோடு மட்டுமின்றி இப்பிரச்சனைக்குக் காரணமான போலீசார் இருவரை சஸ்பெண்ட் செய்யவுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது. எனவே எப்படியாவது இந்த வழக்கைத் திசைதிருப்பம் வேண்டும் என்பதற்காகவும், காவல்நிலைய மரணத்திற்கும், போலீசாருக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் மறைமுகமாகக் கொடுத்ததாக நியூஸ் மினிட் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. ஆனால் உறவினர்கள் இப்பணத்தை வாங்கவில்லை எனவும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தொடர் கோரிக்கையை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயிரிழ்ந்த விக்னேஷின் சகோதரி நியூஸ் மினிட்டிற்கு அளித்த பேட்டியில், “பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலைப்பார்ப்பதற்கு உறவினர்களையோ? நண்பர்களையோ? அனுமதிக்கவில்லை. குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மறுத்ததோடு, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிணவறையிருந்து நேரடியாக வியாழன் மாலை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றதாக” குற்றம் சாட்டினார். எனவே முறையான விசாரணை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மரணம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.