புகைப்படங்களை வைத்து மிரட்டல்

சென்னை மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 27 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக ஜாகீர் உசேன் என்பவருடன் பழகி வந்த நிலையில் , கருத்து வேறுபாடு காரணமாக அப்பெண் , ஜாகீர் உசேனை விட்டு விலகிச் சென்றுள்ளார். பின்பு அந்த பெண்ணிற்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதை தெரிந்து கொண்ட ஜாகீர் உசேன் , தான் பழகிய போது எடுத்த புகைப்படங்களை வைத்து திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

வன்கொடுமை தடுப்பு சட்டம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட 27 வயது பெண் , T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிறையில் அடைப்பு

T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் ( வயது 32 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேன் , விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல் வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது.100 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் அவர்களின் உத்தரவின்பேரில், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப் படையினர் தொடர்ந்து கண்காணித்து , போதைப் பொருட்களை வைத்திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக , P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கொடுங்கையூர் காமராஜர் சாலையில் கண்காணித்து அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

பெங்களூரிலிருந்து வாங்கி வந்து விற்பனை

சந்தேகம் அதிகரிக்கவே அவர்களை சோதனை செய்த போது , உடல்வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில், P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த நபர்கள் 1.மகேஷ் ( வயது 36 )  2.சுமன் ( வயது 38 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 Tapentadol மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  மாத்திரைகளை பெங்களூருவிலிருந்து வாங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் மகேஷ் மீது ஏற்கனவே 9 குற்ற வழக்குகளும். சுமன் மீது 2 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.