சென்னையின் பரபரப்பான பகுதிகளில் ஒன்று சைதாப்பேட்டை. மேற்கு சைதாப்பேட்டை அருகே அரங்கநாதன் சுரங்கப்பாதை உள்ளது. இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாணுமலையான். அவருக்கு வயது 65. இவர் பிரபல ஆடிட்டராக அறியப்படுகிறார்


பட்டப்பகலில் கொள்ளை:


இந்த நிலையில், கடந்த மாதம் 21-ந் தேதி தாணுமலையான் வீட்டின் உள்ளே புகுந்தனர். முகமூடி அணிந்து கொண்டு உள்ளே நுழைந்த அவர்கள் தாணுமலையானை கட்டிப்போட்டனர். பின்னர், தாணுமலையானின் வீட்டின் உள்ளே இருந்த 7 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 25 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.


பரபரப்பான சைதாப்பேட்டையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து துணிகர கொள்ளை சம்பவம் நடந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக இதுதொடர்பாக குமரன்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சைதாப்பேட்டை உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெய்சில் தலைமையில் 3 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது.


கார் டிரைவர்:


இந்த நிலையில், கொள்ளையர்கள் தொடர்பாக தாணுமலையானிடம் விசாரித்தபோது முகமூடி அணிந்தவர்களில் ஒருவரின் குரல் அவரது வீட்டில் வேலை பார்த்த கார் ஓட்டுனர் உசேனின் குரல் போலவே இருந்தது என்று கூறினார். மேலும், அவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாணுமலையான் வேலையை விட்டு நீக்கியதாகவும் கூறியுள்ளார்.


இதையடுத்து, உசேனை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, அவர் மீதான சந்தேகம் உறுதியானது. பின்னர், அவரது செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அவர் அவரது தாயாரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது.


பணம், நகை மீட்பு:


இதையடுத்து, உசேனின் தாயார் வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளில் பெரும்பாலானவை அங்கு இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர், அந்த நகைகளை போலீசார் மீட்டனர். இருப்பினும், உசேன் தற்போது வரை எங்கிருக்கிறார்? அவருடன் வந்த கூட்டாளிகள் யார்? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.


உசேன் தற்போது நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  இதையடுத்து, தனிப்படை போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.