கள்ளக்குறிச்சி: பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்த உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிறுமியை எம்.எல்.ஏவின் மருமகள் மார்லினா மற்றும் மகன் ஆன்டோ மதிவாணன் ஆகியோர் தாக்கி கொடுமைப்படுத்தியதாக இளம்பெண் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இவரது மனைவி செல்வி சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த செல்வியின் மகள் ரேகா (வயது 18) என்பவர் சென்னை திருவான்மியூரில் உள்ள பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்க்கப்பட்டார்‌.


மேலும், ரேகா 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாகவும் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்து ஏழு மாதத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர்களது வீட்டில் உள்ள எம்எல்ஏவின் பேரக்குழந்தை அழும்போதெல்லாம் ரேகாவை அவரது மகன் மற்றும் மருமகள் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் உடலின் பல இடங்களில் சிகரெட்டால் எம்எல்ஏ மகன் சூடு வைத்ததாகவும் அவரது மருமகள் தலைமுடியை வெட்டி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.


இதனையடுத்து கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு வரவேண்டும் என அவரது தாய் அழைத்ததாலும் சென்னையில் ரேகா துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் மீறி கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும்,


அதன்பின்பு நேற்று இரவு எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் அவரது மாமனார் மாமியார் ஆகியோர் காரில் அழைத்து வந்து திருநறுங்குன்றம் கிராமத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றதாகவும் தற்போது தொடர்ந்து உடலின் பல இடங்களில் காயம் இருப்பதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதாக ரேகா உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாக உளுந்தூர்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.


வழக்குப் பதிவு 


இந்த நிலையில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டம், குழந்தைப் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசியது, தாக்கியது, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.