நகை கடைக்கு அடகு வைக்க வந்த நபர்

சென்னை கொளத்தூர் V.P.C நகர் 1 வது தெருவில் வசித்து வரும் தினகரன் வயது ( 23 ) என்பவர் தி.நகர் பகுதியில் உள்ள இந்தியா கோல்ட் என்ற தங்க நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 22 ம் தேதி அன்று இந்தியா கோல்ட் தங்க நகை கடைக்கு , தங்க நகைகளை அடமானம் வைக்க வந்த நபர் ஒருவர் சுமார் 26 கிராம் எடையுள்ள 1 மோதிரம் மற்றும் 1 டாலரை அடகு வைக்க கொடுத்துள்ளார். அப்போது பரிசோதனை செய்த போது , அது போலி நகைகள் என தெரிய வந்தது. இதுகுறித்து , அந்த நிறுவனத்தில் பணி புரியும் தினகரன் என்பவர் ,  E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஏற்கனவே நிலுவையில் உள்ள குற்ற வழக்கு

E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்டம் திருமங்கலம் , அப்பக்கரை வடக்கு தெரு பகுதியை சேர்ந்த தனஞ்செயன் ( வயது 30 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 கிராம் எடையுள்ள போலி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட தனஞ்செயன் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட  தனஞ்செயன் விசாரணைக்குப் பின்னர் , நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

அடிக்கடி லேப்டாப் பழுது, நிறுவனத்தை மீட்டுத் தர ரூ.23 லட்சம் பண மோசடி

சென்னை நங்கநல்லூர் ஜெயின் ஸ்டாஃப் காலனியில் வசித்து வரும் சங்கராமன் ( வயது 48 ) என்பவர் வேளச்சேரி!பஜனை கோயில் தெரு , டேனியல் வணிக வளாகத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

நிறுவனத்தை புதுப்பிப்பதாக ஏமாற்று வேலை

இவரது நிறுவனத்தில் பிரவீன் சுந்தர் என்பவர் அடிக்கடி லேப்டாப் பழுது பார்க்கும் வேலை செய்து கொடுத்து பழகி வந்த நிலையில் , பிரவீன் சுந்தர் தனக்கு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்து , நாங்கள் இருவரும் நடத்தி வரும் எம்.பி.எஸ். கம்யூனிகேஷன் என்ற நிறுவனம் மூடும் நிலையில் உள்ளதாகவும் , தாங்கள் எடுத்து நடத்தினால் நிறைய லாபம் கிடைக்கும் என கூறியதன் பேரில் , சங்கரராமன் மேற்படி எம்.பி.எஸ். கம்யூனிகேஷன் நிறுவனத்தை புதுப்பிக்க இயந்திரங்கள், செல்போன்கள் வாங்க ரூ.4,14,600/- கொடுத்ததாகவும் மேலும், அரசாங்கத்திடமிருந்து சிசிடிவி கேமராக்கள் அமைக்கவும் , பழுது பார்க்கவும் , குத்தகை பெற்றுத் தருவதாக கூறி ரூ.18,85,400/- பணத்தை பிரவீன் சுந்தர் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோரிடம் கொடுத்ததாகவும் மேலும், தனது வாடிக்கையாளர்களிடம் சர்வீஸ் செய்வதற்காக வாங்கிய செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை சர்வீஸ் செய்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றியதாகவும், மேற்படி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி சங்கரராமன் J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில் சிக்கிய நபர்

வழக்கு பதிவு செய்த பின்பு , வேளச்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் , புகார் தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென்பதும் , புகார் தாரரை நம்ப வைத்து சுமார் ரூ.23 இலட்சம் பணம் மோசடி செய்ததும் தெரிய வந்ததின் பேரில், இவ்வழக்கில் தொடர்புடைய பிரவீன் சுந்தர் ( வயது 27 ) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரவீன் சுந்தர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.