குரோம்பேட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில தம்பதியினரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்


கஞ்சாவும் சென்னை புறநகர் பகுதிகளும் 


சென்னை எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது, அதற்கேற்றார் போல் சென்னை புறநகர் பகுதிகளும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. நாள்தோறும் பொதுமக்களின் குடியேற்றமும் அதிகரித்து வருகிறது. மறுபுறம் கல்லூரிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களும் சென்னை புறநகர் நோக்கி படையெடுக்கின்றனர். 


இளைஞர்களை குறிவைத்து


தொடர்ந்து இளைஞர்கள் அதிகளவு சென்னை புறநகர் பகுதிகளாக இருக்கக்கூடிய தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பல் பகுதிகளில் ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா மோகமும் அதிகரித்திருப்பதால், இவற்றை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க பல்வேறு குழுக்கள் உலா வருகின்றன.


உள்ளுரை சேர்ந்த இளைஞர்கள், குட்டி ரவுடிகள், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என பாகுபாடு இல்லாமல் பலரும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை காவல்துறையினர் முறையாக தடுப்பதில்லை என குற்றச்சாட்டும் நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இந்தநிலையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட வெளிமாநில தம்பதி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


போலீசாருக்கு ரகசிய தகவல்


சென்னை குரோம்பேட்டை அடுத்த நாகல்கேனி பகுதியில் உள்ள மீன் விற்பனையகம் அருகே சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகம்படும் படி நின்று கொண்டிருந்த வடமாநில தம்பதியை பிடித்து சோதனைச் செய்த பொழுது, அவர்களிடம் 2 கிலோ மதிப்புள்ள  கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.


சிக்கிய தம்பதி


இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரனையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷியாம் ஹன்ஸ் (33) மற்றும் பரிமா ஹன்ஸ்(30) எனவ திருப்போரூரில் தங்கி கட்டடட வேலை செய்து வந்த நிலையில் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு பல்லாவரம், தாம்பரம், சங்கர்நகர் ஆகிய பகுதியில் விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புகொண்டதை அடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


சில ஆண்டுகளாகவே இந்த தம்பதியினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் எங்கிருந்து இருவரும் கஞ்சாவை கொண்டு வந்தார்கள், கஞ்சா சப்ளை செய்யும் முக்கிய நபர் யார் ? இதில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் விசாரணையை துவங்கியுள்ளனர்.