Adyar Ananda Bhavan Supervisor Killed For Extra Sambhar : சென்னை உணவகத்தில் சாம்பார் தராததால் உணவக ஊழியரை தந்தை மற்றும் மகன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சாம்பார் தர மறுத்த உணவக ஊழியர்:


சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல்  பகுதியில் பிரபல சைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இங்கு தஞ்சையைச் சேர்ந்த அருண் (30) என்பவர் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவர் பம்மல் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.  


இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி இரவு 55 வயதுடைய சங்கர் மற்றும் அவரது மகன் அருண்குமார் ஆகியோர் இந்த  உணவகத்திற்கு வந்துள்ளனர். அப்போது, இட்லி பார்சல் வாங்கி உள்ளனர். இட்லி பார்சல் வாங்கிய தந்தை சங்கரும், அவரது மகன் அருண்குமாரும் உணவகத்தின் மேற்பார்வையாளரான அருணிடம் கூடுதலாக சாம்பார் மற்றும் சட்னி கேட்டிருந்ததாக கூறப்படுகிறது


 கூடுதலாக தர முடியாது என்றும் கூடுதலாக வேண்டும் என்றால் பணம் செலுத்தி தான் வாங்க முடியும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால், தந்தை சங்கர் மற்றும் மகன் அருண்குமாரும் உணவக  மேற்பார்வையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உணவக மேற்பார்வையாளரான அருணுக்கும், தந்தை சங்கர் மற்றும் மகன் அருண்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


அடித்தே கொன்ற தந்தை, மகன்:


இந்த தகராறை தடுக்க வந்த காவலாளியை, தந்தை சங்கர் கடுமையாக தாக்கி உள்ளார். இதனை தடுக்க வந்த உணவக மேற்பார்வையாளர் அருணையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால், மயங்கி விழுந்த அருண் எழுந்திருக்கவில்லை. உடனே அவரை மீட்டு அருகில் இருக்கும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சக ஊழியர்கள் கொண்டு சென்றனர்.


அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் மற்றும் சங்கரை  கைது செய்தனர்.  இவர்கள் இரண்டு பேரும் சம்பவத்தன்று மது போதையில் இருந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  சாம்பார் தர மறுத்த உணவக ஊழியரை, தந்தை, மகன் கொலை செய்ததாக சொல்லப்படும் தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




மேலும் படிக்க


ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு - விடுப்பில் சொந்த ஊர் திரும்பியபோது நேர்ந்த சோகம்


வெளிநாட்டில் வேலை! 45 லட்சம் மோசடி! கர்நாடகாவில் இருவரை தட்டி தூக்கிய நெல்லை போலீஸ்!