சென்னை, நெசப்பாக்கம் பகுதியில் அப்பகுதி இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் விளையாடுவதற்காக மைதானம் ஒன்று உள்ளது. அந்த மைதானத்திற்கு தினசரி சிறுவர்கள் உள்பட பலரும் விளையாட வருவது வாடிக்கையாகும். இந்த நிலையில், அந்த பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுவன் அந்த மைதானத்தில் தினசரி தனது பள்ளி நண்பர்கள் இருவருடன் சேர்ந்து விளையாட சென்றுள்ளான்.


அதே மைதானத்திற்கு தினசரி கோபிகண்ணன் ( வயது 32) என்பவரும் வந்து கொண்டிருந்தார். அவர் மணப்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். கோபி எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். சிறுவர்கள் மைதானத்திற்கு தினசரி விளையாட வருவதையறிந்த கோபி, தாமாகவே சென்று சிறுவர்களிடம் பேசியுள்ளார். பின்னர், அந்த சிறுவர்களிடம் தடகள பயிற்சி அளிப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.


சிறுவர்களும் கோபியின் பேச்சை நம்பியுள்ளனர். பின்னர், அந்த சிறுவர்களும் தங்களது பெற்றோர்களிடம் தடகள பயிற்சி விவகாரத்தை கூறியுள்ளனர். பெற்றோர்களும் தங்களது மகன்கள் தடகள பயிற்சி பெறுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சிறுவர்கள் கோபிகண்ணனிடம் பயிற்சிக்கு சென்றுள்ளனர். தொடக்கத்தில் மிகவும் அமைதியாக நடந்து கொண்ட கோபிகண்ணன், நாளடைவில் சிறுவர்களிடம் பயிற்சி அளிப்பதாக கூறி அத்துமீறி நடக்க முயன்றுள்ளார்.


பயிற்சி அளிப்பதாக சிறுவர்களிடம் கூறிய கோபிகண்ணன் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால், சிறுவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, கோபி கண்ணனின் பாலியல் தொல்லை தொடர்பாக சிறுவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, சிறுவர்களின் பெற்றோர்கள் அனைவரும் இந்த விவகாரம் குறித்து எம்.ஜி.ஆர்.நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.


பெற்றோர்களின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் பூமாறன், உதவி ஆய்வாளர் ராஜா பாரதிதாசன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக கோபிகண்ணனை கைது செய்தனர். மேலும், கோபி கண்ணன் மீது போக்சோ சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


நெசப்பாக்கம் மைதானத்திற்கு வந்த சிறுவர்களுக்கு பயிற்சியாளர் என்ற போர்வையில் எலக்ட்ரீசியன் ஒருவர் பாலியல் தொல்லை அளிக்க முயற்சித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மைதானத்திற்கு வருபவர்களை முறையாக கண்காணிக்கவும், மைதானத்தில் அத்துமீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண