கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே அமைந்துள்ளது சூளகிரி. இங்குள்ள ஏனுசோனையை அடுத்த பி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மகன் சந்தோஷ். அவருக்கு வயது 23. இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சந்தோஷ் தியாகரசனபள்ளி – பி. கொத்தப்பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.


அப்போது, அவரை மர்மநபர்கள் சிலர் வழிமறித்தனர். அவர்கள் தங்கள் கையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த சந்தோஷ் அங்கிருந்து தப்பித்து ஓடினார். ஆனாலும், அவரை விடாமல் துரத்திச்சென்ற மர்மநபர்கள்  அவரை தாங்கள் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.




தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, ரத்தவெள்ளத்தில் சந்தோஷ் சடலமாக கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தோஷ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கலப்புத்திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும், அந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.


இதையடுத்து, போலீசார் உயிரிழந்த சந்தோஷின் மனைவி மீனாவின் அண்ணன் முருகேஷ் என்பவரிடமும், அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த அவர்கள் சந்தோஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். சந்தோஷூம், மீனாவும் வேறு, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.


இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதல் மீனா வீட்டிற்கு தெரியவர மீனாவின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீனாவின் அண்ணன் முருகேஷூம் மீனாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் கடும் எதிர்ப்புக்கு இடையே மீனா சந்தோஷை திருமணம் செய்ய வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.




பின்னர், நண்பர்கள் உதவியுடன் சந்தோஷூம், மீனாவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 4 மாதங்கள் சந்தோஷூம், மீனாவும் நிம்மதியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆனால், தங்கை வீட்டு விட்டு வெளியேறி திருமணம் செய்ததால் தனது குடும்பத்திற்கு அவமானம் என்று முருகேஷ் ஆத்திரத்துடன் இருந்துள்ளார். இதனால், தனது நண்பர்களுடன் சேர்ந்து முருகேஷை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.


இந்த திட்டப்படி, 25 வயதான முருகேஷ், அவரது நண்பரான 24 வயதான குமார் மற்றும் 18 வயதுடைய கூட்டாளி ஒருவர் என மூன்று பேர் திட்டமிட்டு, சந்தோஷை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். தங்கை மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் தங்கை கணவரை சொந்த மச்சானே குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண