சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் பெரிய மசூதியில் ரமலான் சிறப்புத் தொழுகை நேற்று நடைபெற்று முடிந்தது. பின்னர் அங்குக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த சில நபர்கள் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களிடம் பணம் கேட்டுத் தொல்லைச் செய்துள்ளனர். இதனை மசூதியின் உறுப்பினரான முகமது ரியாஸ் தொழுகையை முடித்து வெளியே வந்து எதற்காக பணம் கேட்குறீர்கள் எனக் கண்டித்துள்ளார்.


இடையே கடும் வாக்குவாதம்


இதனைக் கண்ட மசூதியின் விழா கமிட்டி செயலாளர் பாஷா என்கிற அதிகூர் ரகுமான் ரியாஸைத் தட்டி கேட்டுள்ளார். அப்போது முகமது ரியாஸுக்கு பாட்ஷாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . அது முற்றி ரியாஸை பாட்ஷா கீழே தள்ளியுள்ளார். இதனால் நெற்றி மற்றும் கண் அருகே காயம் ஏற்பட்டு ரியாஸ் மயக்க நிலை அடைந்துள்ளார். இது குறித்து ரியாஸ் மகனிடம் அங்கிருந்தவர்கள் தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர்.மயக்கம் அடைந்த நிலையில் இருந்த ரியாஸை உடனடியாக அருகில் உள்ள  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இருதய நோயாளி


 ஏற்கனவே இருதய நோய் பாதிப்பில் உள்ள அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்ததில் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். சிட்லப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவ இடத்தில் பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையா உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டர். உயிரிழந்த முகமது ரியாஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகப் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காரணமாக அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு நிலவி வருகிறது