செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவருடைய மகன் கபிலன் வயது 23. தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் MA முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல், இன்று காலை வீட்டில் இருந்து தனது காரில் கல்லூரிக்கு செங்கல்பட்டு மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பேருந்து எதிர் திசையில் சென்ற காரின் மீது நேருக்குநேர் மோதியதில் கார் முழுமையாக அப்பளம்போல் நொறுங்கியது .



 

 இதில் கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கழுகுன்றம் போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் விபத்தின்போது கார் சிதைந்ததால், உயிரிழந்தவரின் உடலை மீட்க முடியாமல் காவல்துறையினர் போராடினார்.



 

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மீட்பு துறையினர் வரவழைக்கப்பட்டு,சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி உயிரிழந்த கபிலனின் உடலை மீட்டனர்.  உயிரிழந்த கபிலன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கழுக்குன்றம் தமிழ்மணியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கபிலன் உயிரிழந்த தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

 

 



இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போது நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் பேருந்து மற்றும் கார் ஆகிய இரண்டும் வேகமாக வந்துள்ளது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வாகனம் அரசு பேருந்து மோதி உள்ளது. திடீரென்று ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக வாகனத்தில் பயணித்த கபிலன் என்பவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணித்த சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்த தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணை முடிவில் முழு தகவல் தெரிய வரும் என தெரிவித்தனர்.

 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்