ஜோபன்பிரீத் சிங் 

 

பல்வேறு  குற்றங்களுக்காக பஞ்சாப் மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த  பஞ்சாப் இளைஞர், துபாயில் இருந்து விமானத்தில் சென்னை வந்த போது, சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர். அதோடு பஞ்சாப் போலீசுக்கு அவசரமாக தகவல் கொடுத்துள்ளனர். . துபாய் நாட்டிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த   பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை இட்டனர். அப்போது அந்த விமானத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜோபன்பிரீத் சிங் (22) என்ற பயணியின் பாஸ்போர்ட், ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இவர் பஞ்சாப் மாநிலத்தில்  பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

 

பஞ்சாப் மாநில சிறப்பு போலீஸ்

 

இவரை பஞ்சாப் மாநில சிறப்பு போலீஸ் படையினர் கைது செய்ய தேடி வந்தனர்.  ஆனால் ஜோபன்பிரீத் சிங், வெளிநாட்டிற்கு தப்பி ஓடி தலை மறைவாகி விட்டார். இதை அடுத்து தனிப்படை போலீஸ் எஸ் பி, ஜோபன்பிரீத் சிங்கை கடந்த ஜூலை மாதம், தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அவருடைய போட்டோக்களை அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அனுப்பி, எல் ஓ சி போடப்பட்டிருக்கிறது என்ற தகவல்  தெரிய வந்தது.

 

சுற்றி வளைத்து பிடித்து..

 

இதை அடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஜோபன்பிரீத் சிங்கை சுற்றி வளைத்து பிடித்து, குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு தனி அறையில் அடைத்து வைத்து, சென்னை விமான நிலைய போலீசை  பாதுகாப்புக்காக நிறுத்தினர். அதோடு பஞ்சாப் மாநில போலீசுக்கும் அவசரமாக தகவல் கொடுத்துள்ளனர். பஞ்சாப் மாநில தனிப்படை போலீசார், ஜோபன் பிரீத் சிங்கை கைது செய்து பஞ்சாப் கொண்டு செல்வதற்காக, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.