மணலியில் தன்னைத்தாக்கிய பிரபல ரவுடியை கொலை செய்த அண்ணன் மற்றும்  தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


சென்னையையடுத்த மணலி, எடப்பாளையம் ஜீவானந்தம் தெருவைச் சேர்ந்தவர் குட்டி என்ற ராஜசேகரன். குற்ற வழக்கில் ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும் இதற்காக கடந்த 2 ஆம் தேதி முதல் மணலி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.





குற்ற வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த இவர், வழக்கம் போல தனது நண்பர்களுடன் சந்தோஷமாக சுற்றித்திரிந்து வந்தார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு மணலி சின்ன சேக்காடு பார்த்தசாரதி குறுக்குத் தெருவில் உள்ள காலி மைதானத்தில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சிலர் கையில் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்து ரவுடி ராஜசேகரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் ரவுடி ராஜசேகர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.


இதனையடுத்து அப்பகுதி மக்கள் மணலி போலீசாருக்கு இதுக்குறித்து தகவல் தெரிவித்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தப் போலீசார், ரவுடியின் உடலைக்கைப்பற்றி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைச்சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிந்துவிட்டனர். பின்னர் இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.





பின்னர் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த மாதம் ரவுடி ராஜசேகரன், அவரது நண்பர் ஜெயக்குமார் என்பவருடன் சேர்ந்து சின்ன சேக்காடு அப்துல்கலாம் நகரைச்சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ், அவருடைய தம்பி சதீஷ்குமார் ஆகியோரை தாக்கி அவர்களிடமிருந்து இருந்த செல்போனைப் பறித்து சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் இருவரும் சேர்ந்து,“ தன்னை தாக்கியவரை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காக மது போதையில் இருந்த பிரபல ரவுடி குட்டி என்ற ராஜசேகரை சரமாரியாக தாக்கி கொலை“ செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த  போலீசார் அண்ணன் மற்றும்  தம்பியுமான விக்கி, சதீஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தற்போது கொலை செய்யப்பட்ட குட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு கோபால் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.