சென்னை பிராட்வே அருகே உள்ள பூக்கடை பேருந்து நிலையத்தில் ஜூஸ் மற்றும் பழக்கடை நடத்தி வந்தவர் 59 வயதான சவுந்தரராஜன். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள் உள்ளனர். முன்னதாக, சவுந்தரராஜன் அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்து வந்தார். பின்னர் அவர் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பூக்கடை பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற இருந்தது. அங்கு வைத்து 2 பைக்கில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக சவுந்தரராஜனை தலையில் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து எஸ்பிளனேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வியாசர்பாடியைச் சேர்ந்த 22 வயதான வசந்த்குமார் என்ற நபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திமுகவைச் சேர்ந்த சவுந்தரராஜன் கடந்தவாரம் பூக்கடை பகுதியில் சுவர் விளம்பரம் செய்து கொண்டிருந்ததாகவும் வழக்கமாக அந்த சுவரில் அதிமுகவினர் சுவர் விளம்பரம் எழுதுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் நடத்த திட்டமிட்டுருந்தனர். ஆனால், அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்ததால் திமுக சார்பில் பிரமாண்டமாக தண்ணீர் பந்தல் ஏற்பாடுகளை செய்திருந்தார் சவுந்தரராஜன். அதன் அருகிலேயே சுவர் விளம்பரங்களையும் எழுதி இருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த கணேசன் என்பவர், 'வழக்கமாக இந்த இடத்தில் நாங்கள் தான் சுவர் விளம்பரம் எழுதுவோம்' என்று கூறியுள்ளார். அப்போது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
இதுகுறித்து சவுந்தரராஜன் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தபோலீசார் கணேசனை அழைத்து கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் மற்றும் அவரது மகன்கள் சதீஷ், தினேஷ், கணேசனின் மைத்துனர் இன்பா மற்றும் சிலர் சேர்ந்து சம்பவத்தன்று சவுந்தரராஜனை வெட்டி கொலை செய்ததாகவும், அதற்கு வசந்த்குமார் துணையாக இருந்ததாகவும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் வசந்த்குமாரை காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கணேசனின் மகன் சதீஷ் வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான கணேசன் அவரது மகன் தினேஷ், மைத்துனர் இன்பா, கார்த்திக், குமரேசன் ஆகிய 5 பேரும் நேற்று மதியம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கணேசனின் மகனும் வழக்கறிஞருமான சதீஷ்குமார் மட்டும் நீதிமன்றத்தில் பதுங்கி இருந்தார். அவர் நேற்றிரவு 10 மணியாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து, மாவட்ட நீதிபதியின் அனுமதி பின் படி நீதிமன்றத்தின் உள்ளே சென்ற காவல்துறையினர் பார்கவுன்சில் அறையில் பதுங்கி இருந்த சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணைக்காக காவல்துறையினர் சதீஷை அழைத்துச் சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்