ஆருத்ரா


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த உள்ள சேவூர் கிராம பகுதியில் தனியார் லாட்ஜ் வளாகத்தில் புதியதாக தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்று, கடந்த 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்களாக கூறி டெபாசிட் தொகை வசூலிக்க கூடாது என்றும், எந்த ஒரு நிறுவனமும் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள வருவாய் துறை மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெற்று கிளைகள் தொடங்க வேண்டும் என்பது அரசின் விதியாக உள்ளது.


அட இது குட்டி சதுரங்க வேட்டை


இந்நிறுவனம் காஞ்சிபுரத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து சேவூர் கிராமத்தில் துவங்கப்பட்ட அந்த நிறுவனம், ஒரு கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்குவதாகவும், தொடர்ந்து 12 மாதம் வழங்கப்படும் என்றும், மேலும் 2 தங்க காசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் டெபாசிட் செய்த பணத்திற்கான ஆவணம் புதுப்பித்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


மேலும், அந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் கிளைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கவர்ச்சிகரமான இந்த திட்டத்தால், அலுவலகம் திறந்த ஒரு மணிநேரத்தில் வாடிக்கையாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தங்களின் பணத்தை டெபாசிட் செய்துள்ளதாக தெரிகிறது. 'சதுரங்க வேட்டை படம் பாணியில் பணம் பறிக்க வேண்டுமென்றால் ஆசையை தூண்ட வேண்டும் என்ற பாணியில், இந்த நிறுவனம் திறக்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவியது.


அதிரடி சோதனை


பல செய்திகளிலும் இந்நிறுவனம் குறித்து செய்தி, வெளிவந்ததை தொடர்ந்து, கடந்த வாரம் இந்த நிறுவனம் செயல்படும் 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சென்னை அமைந்தகரையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பல மணி நேரம் சோதனை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள, சேவூர் கிராமத்தில் உள்ள ஆரூத்ரா கோல்டு கம்பெனியில் ராணிப்பேட்டை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி பழனி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு நடத்தி சீல் வைத்தனர்.



இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் ஆதிகேசவ பெருமாள் கோவில் தெருவில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தை பூட்டி நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விளங்காடு கிராமத்தில் ஆருத்ரா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் அவர்களது உறவினர் மணிகண்டன் வீட்டில் 25,000 ரொக்கப்பணம் மற்றும் 362 கிராம் தங்க நகை 650 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல காஞ்சிபுரத்திலும் சோதனை நடைபெற்றது.


பறிமுதல் பண்ணது, ரூ.3.14 கோடி


ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 26 இடங்களில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், மொத்தம் 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 சவரன் தங்க நகைகள், 44 செல்போன்கள், 6 லேப்டாப்கள், 48 கணினி ஹார்டு டிஸ்க்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களின் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.



வழக்குப்பதிவு


ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மீது,420,406,120B, Banning of unregulated deposit schemes and ரிசர்வ் பேங்க் சட்டம் 1934 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் மேலும் தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க புலனாய்வு அதிகாரி eowtn7of2022@gmail.com ஐ தொடர்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் மட்டுமே குடிமக்கள் தங்கள் பணத்தை சேமிக்க / டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 



100 கோடி


இந்த மோசடி தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முதன்மை இயக்குநர்களான பாஸ்கரன், மோகன் பாபு ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கணக்காய்வு செய்தனர். அதில், பொதுமக்களிடம் இதுபோல் பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்தது உறுதியானது. அதைத்தொடர்ந்து ஆருத்ரா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் 70 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆருத்ரா நிதி நிறுவன நிர்வாகிகளான பெண் உட்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவின் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.