சென்னை, மயிலாப்பூரில் நகைகளுக்காக ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவர்களை கொலை செய்த கார் ஓட்டுனர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளியை ஆந்திர போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னையில் கொலை செய்துவிட்டு ஆந்திரா வழியாக தப்ப முயற்சித்தது தெரியவந்தது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட லால்கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளியி ரவியிடம் இருந்து 8 கிலோ தங்கம் மற்றும் 50 கிலோ வெள்ளி வெள்ளி நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆடிட்டர் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 10 வைர மூக்குத்திகள், பிளாட்டினம் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையின் பிரபல ஆடிட்டர்களில் ஒருவராக திகழ்ந்த ஸ்ரீகாந்த் ரூபாய் 40 கோடிக்கு பணப்பரிவர்த்தனை செய்வதை லால்கிருஷ்ணா அறிந்துள்ளார். இதையடுத்து, அந்த பணத்திற்காக ஸ்ரீகாந்தை கொலை செய்ததாக லால்கிருஷ்ணா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு மட்டும் ரூபாய் 5 கோடி ஆகும். மேலும், இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்தவர் பிரபல ஆடிட்டர் ஸ்ரீகாந்த். வயது 60. இவரது மனைவி அனுராதா. அவரது வயது 55. இவர்களது மகள் சுனந்தா அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர்கள் கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள தங்கள் மகள் சுனந்தாவை பார்க்க சென்றுவிட்டனர்.
இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளனர். இவர்களை வீட்டுக்கு அழைத்து வர இவர்களது கார் டிரைவர் லால் கிருஷ்ணா வந்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த லால்கிருஷ்ணா கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீகாந்தின் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையடுத்து, சுனந்தா தங்களது பெற்றோர்கள் இருவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனரா? என்று தெரிந்து கொள்ள தனது பெற்றோர்களுக்கு போன் செய்துள்ளார். அப்போது, தந்தை, தாய் இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், பதற்றமடைந்த சுனந்தா அடையாறில் உள்ள தனது உறவினர் திவ்யாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
திவ்யா தனது கணவர் ரமேஷூடன் நேரில் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால், அக்கம்பத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டின் உள்ளே ரத்தக்கறை இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மயிலாப்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீகாந்திற்கு ஈ.சி.ஆர். சாலையில் ஒரு பங்களா இருப்பது தெரியவந்துள்ளது.
அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் வீட்டின் அருகே புதியதாக குழி தோண்டியதற்கான அடையாளங்கள் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த குழியை தோண்டியபோது ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா சடலங்கள் இருந்துள்ளது. இந்த சூழலில்தான் ஆந்திராவில் கொலையாளிகள் கார் ஓட்டுனர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்