துபாயில் இருந்து விமானத்தில், சென்னைக்கு கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ. 1.25 கோடி மதிப்புடைய சுமார் 2 கிலோ தங்கப் பசை, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த இலங்கை பயணியும், சுங்கச் சோதனை இல்லாமல், தங்கத்தை வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற, விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் இரண்டு பேர், உட்பட 3 பேரை, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், மடக்கிப்பிடித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையுடன் ஒப்படைத்தனர்.

 

கழிவறையில் நீண்ட நேரம் செலவிட்ட நபர்

 

சென்னை ( Chennai Airport ) : சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில், நேற்று இரவு, மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும், வெங்கடேஸ்வரன் (30), மதிநுல்லா (28) ஆகிய இரண்டு பேர், சந்தேகப்படும் விதத்தில், சென்னை சர்வதேச விமான நிலையம், புறப்பாடு பகுதியில், குடியுரிமை பகுதி அருகே உள்ள, கழிவறைக்கு சென்று விட்டு, நீண்ட நேரம் கழித்து வெளியில் வந்தனர். அவர்கள் இருவரின் நடவடிக்கைகள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து அவர்கள் இரண்டு பேரையும் நிறுத்தி விசாரித்தனர். இப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள்.

 

சுமார் 2 கிலோ தங்க பசை

 

இதனால் இரண்டு பேரையும் மத்திய தொழிற் பாதுகாப்படை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவர்களை முழுமையாக சோதனை நடத்தினர். அவர்கள் அணிந்திருந்த ஷூ சாக்ஸ்க்குள், சிறுசிறு பார்சல்கள் மறைத்து வைத்திருந்தனர். அதை எடுத்துப் பார்த்தனர் மொத்தம் 8 சிறு பொட்டலங்கள் இருந்தன. அதைப் பிரித்துப் பார்த்தபோது, தங்கப் பசைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 8 பாக்கெட்டுகளிலும், ஒரு கிலோ 902 கிராம், (சுமார் 2 கிலோ) தங்க பசைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு, ரூபாய் 1.25 கோடி.

 

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்தனர்

 

இதையடுத்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதோடு விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது துபாயில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு வந்த, இலங்கையைச் சேர்ந்த முகமது குதாஸ் (36) என்ற பயணி, விமானத்தில் கடத்தி வந்த, இந்த தங்கப் பசை அடங்கிய பார்சலை, இந்த விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் இருவரும், வாங்கிக்கொண்டு, விமான நிலைய கழிவறைக்குள் சென்று, தங்களுடைய ஷூ சாக்ஸ் காலுறைக்குள் மறைத்து வைத்துவிட்டு, சுங்கச் சோதனை இல்லாமல், அந்த தங்கப் பசையை வெளியில் எடுத்துச் செல்ல முயன்றனர் என்று, தெரிய வந்தது. இதை அடுத்து மற்றொரு விமானத்தில், இலங்கைக்கு தப்பி செல்ல இருந்த இலங்கை கடத்தல் பயணி முகமது குதாஸ் என்பவரையும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்தனர்.

 

ஒப்பந்த ஊழியர்கள் உதவியுடன்

 

அதன்பின்பு மூன்று பேரையும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க பசையையும், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் அதிக அளவில் கடத்தி வரப்படுவதும், தங்கம் சுங்கச் சோதனை இல்லாமல், விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் உதவியுடன், எடுத்துச் செல்லப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.