துபாயிலிருந்து சென்னைக்கு சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் தற்காலிக ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் அருள் பிரபாகர் (32) என்பவர் அவசரம் அவசரமாக விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முயன்றார். சுங்கத்துறை அதிகாரிகள், சந்தேகத்தில் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அருள் பிரபாகர் தனக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பெர்மிஷன் போட்டுவிட்டு, வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறினார்.
உச்சகட்ட நடிப்பு
அதோடு அவர் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டார். இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதை அடுத்து ஒப்பந்த ஊழியர் அருள் பிரபாகரை, வெளியில் விடாமல் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை முழுமையாக பரிசோதித்த போது, அவருடைய உள்ளாடைக்குள் பார்சல் ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பார்சலை பிரித்து பார்த்த போது, அதனுள் தங்க கட்டிகள் இருந்தது தெரிய வந்தது.
டிரான்சிட் பயணி
இதை அடுத்து அவரிடம் சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது துபாயில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணி, இந்த தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சலை கடத்தி வந்தார். அருள் பிரபாகர், பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி வரும் வழியில் நின்று, இலங்கை கடத்தல் ஆசாமி கொண்டு வந்திருந்த பார்சலை வாங்கி தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டார். அந்த இலங்கை கடத்தல் பயணி, சென்னை வழியாக இலங்கை செல்லும் டிரான்சிட் பயணி. இதனால் அருள் பிரபாகர், அந்த பயணியை அழைத்துச் சென்று, இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, வெளியில் வரும்போது சுங்கத்துறை இடம் சிக்கிக் கொண்டார் என்று தெரிய வந்தது. மேலும் இந்த தங்கக் கட்டிகளை, விமான நிலையத்திற்கு வெளியே, திரிசூலம் ரயில் நிலையத்தில் நின்ற ஒருவரிடம் கொடுக்க எடுத்துச் சென்றார் என்றும் தெரிந்தது.
கடத்தல் ஆசாமி
இதை எடுத்து சுங்க அதிகாரிகள் தற்காலிக ஒப்பந்த ஊழியர் அருள் பிரபாகரை அழைத்துக்கொண்டு, திரிசூலம் ரயில் நிலையத்திற்கு சென்றனர். ஆனால் அருள் பிரபாகர், சுங்கதுறையிடம் சிக்கிவிட்டார் என்ற தகவல் கிடைத்து, அந்த ஆசாமி மாயமாகிவிட்டார். அதேபோல் துபாயில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்த இலங்கை சேர்ந்த கடத்தல் ஆசாமியும், இலங்கைக்கு விமானத்தில் தப்பி சென்று விட்டார்.
2 கிலோ தங்கம்
இதையடுத்து சுங்க அதிகாரிகள், அருள் பிரபாகரை மட்டும் கைது செய்தனர். தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அவர் வைத்திருந்த பார்சலில் 2 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 1.3 கோடி. அதன்பின்பு சுங்க அதிகாரிகள் அருள் பிரபாகரை மேலும் விசாரணை நடத்துகின்றனர். இவர் எவ்வளவு காலமாக சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுகிறார்? இதற்கு முன்பு இதை போல், கடத்தல் ஆசாமிகளுக்கு துணை போகி உள்ளாரா? இந்த பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திக் கொண்டு வரப்படுவதும், கடத்தல் ஆசாமிகளுக்கு, விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் துணை போவதும், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.