ஓமன் நாட்டில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்திற்குள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக புகைப்பிடித்து, ரகளை செய்த ஓமன் நாட்டுப் பயணி, சென்னை விமான நிலையத்தில் கைது.

 

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்

 

ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 168 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த ஓமன் நாட்டைச் சேர்ந்த முகமத் ஷலீம் (35) என்ற ஆண் பயணி ஒருவர், விமானத்திற்குள் புகைப் பிடிக்க தொடங்கினார்.

 

விமானத்திற்குள் புகைக்காதீர்கள்

 

இதற்கு சக பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு விமான பணிப்பெண்களும், ஓமன் நாட்டுப் பயணியிடம், விமானத்திற்குள் புகைப்பிடிப்பது, பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளது. எனவே நீங்கள் விமானத்திற்குள் புகைக்காதீர்கள் என்று கண்டித்தனர். ஆனால் அந்தப் பயணி, சகப் பயணிகள், விமான பணிப்பெண்கள் எதிர்ப்பை, அலட்சியப்படுத்தியப்படி, தொடர்ந்து புகைப்பிடித்துக் கொண்டு இருந்தார்.

 

புகைப்பிடித்து ரகளை 

 

இதை அடுத்து விமான பணிப்பெண்கள், தலைமை விமானிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, பயணி ஒருவர், விமானத்திற்குள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிராக, புகைப்பிடித்து ரகளை செய்கிறார் என்று தெரிவித்தார். உடனடியாக கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலைய  பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

 

பயணிக்கு குடியுரிமை சோதனை

 

இந்த நிலையில் மஸ்கட்டில் இருந்து, சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், இன்று காலை 8 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டதும், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் ஏறி, புகைப்பிடித்து ரகளை செய்த, ஓமன் நாட்டு பயணியை, பாதுகாப்பாக கீழே இறக்கினர். அதோடு பயணிக்கு குடியுரிமை சோதனை, சுங்க சோதனை அனைத்தையும் முடித்தனர். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

 

போலீசில் புகார் 

 

அதன் பின்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்து, விமானத்திற்குள் புகை பிடித்து ரகளை செய்த, ஓமன் நாட்டு பயணி முகமத் ஷலீமை, போலீசில் ஓப்படைத்தனர். சென்னை விமான நிலைய போலீசார், ஓமன் நாட்டு பயணியை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.