12 கோடி ரூபாய் மதிப்பிலான 1.2 கிலோ தடை செய்யப்பட்ட கொகைன் போதை பொருளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்


எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு எத்தோப்பின் ஏர்லைன்ஸ் மூலம் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பயணியை சோதனை செய்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் அவரை தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது நைஜீரிய வாலிபர் தனது உடலுக்குள் மர்ம பொருள் வைத்திருந்ததை ஸ்கேன் கருவி மூலம் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.


மேலும் விமான நிலைய மருத்துவர்களை வைத்து உடலில் இருந்த மர்ம பொருளை எடுத்துப் பார்த்தபோது. 71 உருளைகள் கொண்ட இந்தியாவில் தடை செய்யப்பட்ட விலை உயர்ந்த போதைப்பொருளான கொக்கையின் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து நைஜீரியா வாலிபர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 1.201 கிராம் கொக்கின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 12 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.


சென்னை விமான நிலையத்தில் தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் விமானம் மூலம் கடத்தி வருபவர்களுக்கு சில லட்ச ரூபாய் வெகுமானம் வழங்கப்படுவதால், பலர் இந்த சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்து இங்கு விற்கும் பொழுது பல மடங்கு லாபம் கிடைப்பதால் தொடர்ந்து கடத்தல் நடைபெற்று வருகிறது. இவற்றை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகளும் பல வழியில் முயற்சி செய்தாலும் தொடர்ந்து கடத்தல் என்பது நடைபெற்று தான் வருகிறது. அவ்வப்பொழுது சென்னை விமான நிலையத்தை மையப்படுத்தி பல கோடி மதிப்புள்ள பொருட்களை கடத்தி வருகின்றனர். அந்த வகையில் 12 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சுங்கத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தொடர்ந்து சென்னை விமான நிலையம் வழியாக கடத்தப்படும் அனைத்து கடத்தல் பொருட்களையும் பிடித்து வருகின்றோம். குறிப்பாக போதைப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க் மூலமாகவே செயல்படுவதால் தொடர்ந்து பல இன்டெலிஜென்ஸ் அடிப்படையில் போதைப் பொருட்கள் கடத்தல் குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றோம். அந்த வகையில் தற்பொழுது 12 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்தி வந்தவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.