தாய்லாந்து மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ. 2.04 கோடி மதிப்பிலான 3993 கிராம் 24 கேரட்  தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.இது தொடர்பாக சென்னை விமான நிலையச் சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '' தாய்லாந்தில் இருந்து சென்னைக்குத் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகளை சோதனை செய்ததில், ரூ.31.01 லட்சம் மதிப்புள்ள 618 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கம் கடத்தி வருவதைக் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர் அவர்களை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


உள்ளாடைக்குள் தங்கம்


முன்னதாக , இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமான பயணியரிடமும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். இலங்கையை சேர்ந்த இரண்டு ஆண் பயணியரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டபோது, அவர்கள் உள்ளாடைகளுக்குள் வைத்திருந்த, 'பார்சல்'களில் தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர். சுங்க அதிகாரிகள் நடத்திய இந்த திடீர் சோதனையில், தாய்லாந்து மற்றும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


ஏர் இந்தியா ஊழியர்


சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் இருந்து, வெளியேற முயன்ற ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் மீது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதுள்ளது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பொழுது முன்னுக்குப் பின் முரணான தகவல்களையும் தெரிவித்து வந்துள்ளார். 
அப்போது, அவருடைய ஆடைகள் மற்றும் கைப்பைக்குள் இருந்த, 2.5 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை, கடத்தல் ஆசாமிகளுக்கு உதவும் நோக்கத்தில், அவர்களிடமிருந்து பெற்று வெளியே எடுத்து செல்ல முயன்றுள்ளார். ஏர் இந்தியா நிறுவன ஊழியரை கைது செய்து, எவ்வளவு நாட்களாக கடத்தல் ஆசாமிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  சுங்க அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், 2 கோடி ரூபாய் மதிப்புடைய, 3,993 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, கடத்தல் ஆசாமிக்கு துணை போன, ஏர் இந்தியா ஊழியர் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர். சமீப காலமாகவே தங்கம் கடத்தல் சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வரும் நிலையில் ஏர் இந்தியா நிறுவன ஊழியர் ஒருவரே இது தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கடத்தல் காரர்களின் தொடர்பு குறித்தும் தற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.