சென்னை விமான நிலையத்தில் சுங்க சோதனையின்போது, மோப்ப நாய் உதவியுடன், போதை பொருளை கண்டுபிடித்து பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவாகாரம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையம்
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், பெருமளவு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதோடு போதை பொருளை கண்டுபிடிப்பதற்கான, நிபுணத்துவம் வாய்ந்த மோப்ப நாயையும், இந்த சோதனைக்கு பயன்படுத்தினர்.
மோப்பம் பிடித்த மோப்பநாய்
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு பாங்காக்கில் இருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா பயணியாக போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் கொண்டு வந்த அட்டைப் பெட்டிகளை, மோப்பம் பிடித்த சுங்கத்துறை மோப்பநாய், உடனடியாக அதே இடத்தில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களால் தரைய கீறி சைகை காட்டியது.
தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை தனியே அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அந்தப் பயணி, அட்டைப்பெட்டிக்குள் சாக்லேட் மற்றும் இனிப்புகள் அதோடு பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இருப்பதால், அந்த வாசனைக்கு நாய் இதை போல் செய்கிறது என்று கூறினர். ஆனாலும் சுங்க அதிகாரிகள் அதை நம்பாமல், அட்டைப்பெட்டிகளை திறந்து பார்த்து சோதனை செய்தனர்.
உயர் ரக கஞ்சா போதை பொருள் பறிமுதல்
அந்த அட்டைப் பெட்டிகளில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அட்டைப் பெட்டிகளில் 7.6 கிலோ உயர் ரக கஞ்சா போதை பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 7.6 கோடி. இதை அடுத்து போதைப் பொருள் கடத்தல் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து, போதைப் பொருளையும் பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுங்கத்துறை விசாரணையில் இந்தப் பயணி, போதை கடத்தல் பொருள் குருவி என்றும், இவரை இந்த கடத்தலுக்கு அனுப்பியது, முக்கியமான போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் என்றும் தெரிய வந்தது. எனவே அந்த முக்கிய போதை கடத்தல் கும்பல் நபர் யார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி, அந்த போதை கடத்தல் கும்பலை சேர்ந்த நபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், ஒரே நேரத்தில் ரூ.7.6 கோடி மதிப்புடைய, 7.6 கிலோ உயர் ரக கஞ்சா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.