ஒரு சீப்பு பழம் ரூ.5-க்கு விற்பனை


தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழைப்பழம் ஒரு சீப்பின் விலை ரூ.5 க்கு விற்பனை செய்வதால், விலை வீழ்ச்சியடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள்  வேதனை அடைந்துள்ளனர். 


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவையாறு,திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், அம்மாப்பேட்டை, பூதலுார் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், சுமார் 1000 ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி செய்துள்ளனர். பெரும்பாலும், வாழை மரக்கன்று நடவு செய்தவுடன், வாழையில், பச்சைநாடா,பூவம், ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை சாகுபடி செய்கின்றனர். வாழைமரத்தில், முதலில் வாழை இலையை அறுப்பார்கள், பின்னர் மறுதாம்பில் வாழை தார்களை அறுப்பார்கள், அதன் பின் வாழை நாராக பிரித்து எடுத்து விடுவார்கள்.




 வாழை மரத்திலிருந்து,  வாழை இலை, பூ, தண்டு, காய், பழம் என தனித்தனியே விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைத்து வருவதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடங்கி, பலமாக மழை பெய்ததால்,  இதன் காரணமாக, வாழைப்பழங்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழை விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.


இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில்,


 ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் முகூர்த்த தினங்கள் அதிகளவில் இருப்பதால் வாழை இலை மற்றும் வாழைப்பழங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருந்தபோதும் இந்த பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வாழைப்பழங்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சந்தைகளில் வாழைத்தார்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் அவற்றை வாங்கி செல்ல முன்வரவில்லை.  விளைச்சல் அதிகஅளவில் ஆனாலும், தொடர் மழையின் காரணமாக பழங்கள், பிஞ்சியிலேயே பழுத்து விட்டதால் விலை போகவில்லை. மேலும் மழை காலத்தில் வாழைப்பழங்கள் சாப்பிடுவதை பொது மக்கள் விரும்பாததால், பழங்கள் தார்களுடன் தேங்கி நிற்கின்றது.


கடந்த மாதம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சீப்பு வாழைப்பழம், ரூ.5-க்கு விற்கப்பட்டது.  இதனால் வாழைத் தாரை வெட்டி சந்தைக்கு எடுத்து வருவதற்கு ஆகும் செலவுக்கு கூட வாழைப்பழங்கள் விற்பனை ஆவதில்லை. இதனால் வாழை விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.




மழை காலங்களில், நெல்லுக்கு இழப்பீடு வழங்குவது போல், வாழைக்கும் இழப்பீடு வழங்கினால், தான் வாழை விவசாயிகள் மீண்டும் சாகுபடி செய்ய முடியும்.  இது எங்களை போன்ற வாழை விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான வாழைத்தார்கள் மரத்திலேயே பழுத்து வீணாகுகின்றன. மழை பாதிப்பை கணக்கீடு செய்யும் அரசு அதிகாரிகள் எங்களை போன்ற விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள  இழப்புகளையும் முறையாக கணக்கீடு செய்து தேவையான இழப்பீடு வழங்க வேண்டும், கொரோனா தொற்று காலத்தில் வாழை தார்கள் விற்பனை செய்ய முடியாமல் மரத்தில் பழுத்து வீணானது.  அப்போதும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இப்போது தொடர் மழையால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.


கடுமையாக விலை சரிந்துள்ள வாழைப்பழங்களை வாங்க ஆள் இல்லை என்பது தான் தற்போது விவசாயிகளின் கவலையாக உள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண