சென்னை, மாங்காடு பகுதியில் வசித்து வருபவர் சலீனா. 48 வயதான இவருக்கு முகமது சலீம் என்ற தம்பி உள்ளார். 44 வயதான முகமது சலீம் தனது குடும்பத்துடன் சென்னை, ஆவடியை அடுத்த கோயில்பதாகை மசூதி தெருவில் வசித்து வருகிறார்.


இந்த நிலையில், முகமது சலீம் நேற்று காலை 6 மணிக்கு தனது அக்கா சலீனாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், “ இந்த மெசேஜ் படிக்கும்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையை முடித்து இருப்போம். இதுகுறித்து யாருக்கும் சொல்ல வேண்டாம். கேரளா, சென்னையில் உள்ள உறவினர்களுக்கு இதுகுறித்து சொல்ல வேண்டாம். எங்களது போட்டோவை பத்திரிகை மற்றும் போலீசாருக்கு தர வேண்டாம். இந்த இடம், பொருட்களை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நகைகளை எனது அக்கா பொண்ணுக்கு கொடுக்க வேண்டும்” என்று நீண்ட குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இதைக்கண்ட சலீனா மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக முகமது சலீமை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவரையும், அவரது குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.




இதனால், சலீனா தனது குடும்பத்தினருடன் முகமது சலீம் வீட்டிற்கு பதற்றத்துடன் சென்றுள்ளனர். அங்கே சென்று பார்த்தபோது முகமது சலீமீன் மகன் அப்துல் சலீம் முகம் முழுவதும் பாலிதீன் கவரால் சுற்றப்பட்டு படுக்கையில் சடலமாக கிடந்துள்ளான். மற்றொரு அறையில், மின்விசிறியில் முகமது சலீமும், மின்விசிறி ஊக்கில் முகமது சலீமின் மனைவி சோபியா நஜீமும் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர்.   அதுவும் இருவரும் தங்களது முகம் முழுவதும் பாலீத்தின் பையால் மூடியும், அந்த பையை நைலான் கயிறு கொண்டும் கட்டியும் தூக்கில் தொங்கியுள்ளனர். இதைக்கண்ட சலீனா குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.


பின்னர், ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் உயிரிழந்த மூன்று பேரின் உடலையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பு, “எங்கள் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. நாங்களே எடுத்த முடிவு இது, இதுகுறித்து எங்கள் குடும்பத்தாரை தொந்தரவு செய்யாதீர்கள்.”என்றும் எழுதியுள்ளனர். மேலும், தங்களது உறவினர்களுக்கு என்று மற்றொரு கடிதத்தையும் எழுதியுள்ளனர்.




போலீசார் விசாரணையில் முகமது சலீம்- சோபியா நஜீம் தம்பதியினருக்கு அப்துல் சலீம் என்ற மகன் இருந்துள்ளான். முகமது சலீம் அசோக்நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 14 வயதான அப்துல் சலீமிற்கு பிறந்தது முதல் காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் இருந்து வந்துள்ளது. இதனால், முகமது சலீம்- சோபியா நஜீம் தம்பதியினர் நீண்ட காலமாக மன விரக்தியில் இருந்துள்ளனர். இந்த மன விரக்தி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050