சென்னையில் கணவன் மற்றும் மகன்களை உதறிவிட்டு வந்த பெண்ணை லாரி டிரைவர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருக்கு 32 வயதான நதியா என்ற மனைவியும், 2 மகன்களும் இருந்துள்ளனர். அதேபோல், திருவண்ணாமலை அருகே கண்ணக்குருக்கை பகுதியை சேர்ந்தவர் 36 வயதான தங்கராஜ். இவர் லாரி டிரைவராக இருந்துள்ளார். இவருக்கும் திருமணமாகி 3 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளது. 


இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கராஜின் செல்போன் எண்ணில் இருந்து தவறுதலாக நதியாவின் செல்போனுக்கு கால் வந்துள்ளது. அதிலிருந்து நதியா மற்றும் தங்கராஜ் நட்பாக பழகிய நிலையில், நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. 


தங்கராஜ் சென்னைக்கு லாரி ஓட்டி வரும்போது நதியாவை சந்தித்து தனியாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் நதியாவின் கணவருக்கு தெரியவர, தங்கராஜ் உடன் ஏற்பட்ட பழக்கத்தை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 


இப்படி நாள்தோறும் சண்டை வளர, நேற்று முன்தினம் இரவு நதியா அவரது கணவர் மற்றும் 2 மகன்களை விட்டுவிட்டு தங்கராஜ் முக்கியமென கிளம்பி திருவண்ணாமலை சென்றுள்ளார். இதை எதையும் எதிர்பார்க்காத தங்கராஜ், நதியாவை தன் வீட்டிற்கு முன்பு கண்டதும் அதிர்ச்சியடைந்துள்ளார். 


அப்போது நதியா தங்கராஜிடம், நான் இனிமேல் உன்னோடு தான் வாழ போகிறேன் என தெரிவித்துள்ளார். கணவர் வேறொரு பெண்ணுடன் வீட்டுக்கு வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கராஜின் மனைவி ரேகா, இருவரையும் உள்ளே அனுமதிக்காமல் சண்டையிட்டு விரட்டியடித்துள்ளார். 


அதைத்தொடர்ந்து, தங்கராஜிம் நதியாவும் பெரியகோலாப்பாடி கிராமத்தில் உள்ள முருகர் கோயில் பகுதிக்கு சென்றனர். அங்கு, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு அழைத்து செல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என நதியா மிரட்டியுள்ளார். அதனால், ஆத்திரம் அடைந்த தங்கராஜ், அவர் கட்டியிருந்த சேலையால் கழுத்தை நெரித்து நதியாவை கொலை செய்துள்ளார். அப்போது, கிராம மக்கள் வருவதை பார்த்து, மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்த அங்கு வந்த பொது மக்கள் அவரை பிடித்து காவல்துரையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர்.