சென்னையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் டாக்டரிடம் ரூ.13 லட்சம் ஏமாற்றிய போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் பல பெண்களை இதுபோன்று ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் பெண் டாக்டர் ஒருவர், இணையதளம் மூலம் திருமண தகவல்மையம் ஒன்றில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்த பெண் டாக்டரின் தகவலை சென்னை நாவலூரை சேர்ந்த கார்த்திக்ராஜ் என்ற 28 வயதான தினேஷ் கார்த்திக் என்பவர் பார்த்து அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.
உடனே, தன்னை டாக்டர் என அறிமுகப்படுத்தி கொண்ட கார்த்திக்ராஜ், அந்த பெண் டாக்டருடன் பழகியுள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 95 ஆயிரம் மற்றும் ஒரு ஐபோனும் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அந்த பெண் டாக்டர், கார்த்திக் ராஜை தொடர்பு கொண்டு, நேரில் சந்தித்து திருமணம் பற்றி பேச வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், கார்த்திக் ராஜ் பல காரணங்களை சொல்லி, நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால், சந்தேகம் அடைந்துள்ள அந்த பெண் டாக்டர், இதுகுறித்து தனது உறவினர் ஒருவரிடம் கூறியுள்ளார், அந்த உறவினர் உடனடியாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கார்த்திக் ராஜை தேடி வந்தனர்.
இந்த சூழலில் காவல்துறையினரிடன் சிக்கிய கார்த்திக் ராஜிடம் கிடுக்கிப்பிடிவிசாரணை நடைபெற்றது. அதில், அவர் பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. பி.காம். வரை படித்துள்ள கார்த்திக்ராஜ், தன்னை டாக்டர் என கூறி ஏமாற்றியுள்ளார்.
மேலும், திருமண தகவல் மையத்திலும் வேறு ஒருவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, இந்த பெண் டாக்டர் மட்டுமல்லாது, மேலும் பல பெண்களிடம் பழகி, லட்சக்கணக்கில் பணம் பறித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரிடம் இருந்து ரூ.98 ஆயிரம், 5 செல்போன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கார்த்திக் ராஜை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்