அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வட மாநில நபர்கள் இடையே மோதலை தடுக்கச் சென்ற காவலரை தாக்கிய 6 வட மாநில நபர்கள் கைது. போலீசாரை வட மாநில வாலிபர்கள் கட்டை, இரும்பு ராடுகள் கொண்டு துரத்திய காட்சி வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ( Chennai News ) : தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்கள் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் குடும்பத்துடன் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் தங்கி, பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு பணியாற்றி வந்தாலும், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வடமாநில நபர்கள் தங்கி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் பணியாற்ற முன் வருவதால் பெரும்பாலான நிறுவனங்கள் வட மாநில இளைஞர்களைப் பணியில் அமர்த்துகின்றன.
அந்த வகையில், சென்னை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டரைவாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் தனியார் தொழிற்சாலையில் வட மாநில வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதன் புகார் சம்பந்தமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் நிலை காவலர் ரகுபதி என்பவர் விசாரிக்க சென்றார். அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் பொழுது, எதிர்பாராத விதமாக காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன.
இதில் காயம் அடைந்த ரகுபதி சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், இரு தரப்பினரிடையே மோதல் குறித்து போலீசார் 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் ரோஷன் குமார், பிளாக் தாஸ், பின்டு, ராம்ஜித், சுராஜ் குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு தரப்பினர் இடையே மோதல் குறித்த காட்சிகள் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த காட்சியில் போலீசாரை வட மாநில வாலிபர்கள் கட்டை இரும்பு ராடுகள் கொண்டு துரத்துவதும், கட்டை உள்ளிட்டவை கொண்டு தாக்கும் காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.