சென்னையில் இரும்பு கதவு சரிந்து 5 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நம்மாழ்வார் பேட்டை அருகேயுள்ள சிவகாமிபுரம் பரக்காசாலை பகுதியில் சங்கர் என்பவர் தனது மனைவி வாணி மற்றும் 5 வயது மகள் ஹரிணி ஸ்ரீயுடன் வசித்து வருகிறார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹர்லிக்ஸ் சாலையில் உள்ள பி.எம்.எஸ் டவர் என்ற காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வரும் ஃபேப் இந்தியா என்ற பிரபல துணிக்கடை நிறுவனத்தில் சங்கர் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணி செய்து வருகிறார்.
இதனிடையே நேற்று இரவு வழக்கம்போல சங்கர் பணியில் இருந்த நிலையில், மனைவி வாணி மற்றும் மகள் ஹரிணி ஸ்ரீ அங்கு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வளாகத்தில் உள்ள 20 அடி அகலம் கொண்ட ஸ்லைடிங் கேட்டை திறக்கும் போது, அது சிறுமி மீது விழுந்துள்ளது. இதில் சிறுமியின் தலை மற்றும் உடல் முழுவதும் நசுங்கிய நிலையில் படுகாயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே முதற்கட்டமாக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்ட விசாரணையில் ஸ்லைடிங் இரும்பு கேட் முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் பொருத்தப்பட்டது தெரிய வந்தது. சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.