முகநூலில் பதிவு செய்யப்பட்ட வீடியோ
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கஞ்சா புகைத்து கொண்டிருந்தவரிடம் கஞ்சாவை எங்கு வாங்கினாய் என , திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த மாநில பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி தனசேகரன் (46) கேட்டிருக்கிறார். இதை வீடியோவாக பதிவு செய்து, பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் தனசேகரன் செய்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மர்ம கும்பல் தாக்குதல்
திருக்கழுக்குன்றம் அடுத்த, கானகோயில்பேட்டை பகுதியில் ஒரு மர்ம கும்பல் அவரது காரை வழிமறித்தது. தப்பி செல்ல முயன்ற தனசேகரனை மர்ம கும்பல் சரமாரி வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் தனசேகரன் படுகாயம் அடைந்தார். அவரை திருக்கழுக்குன்றம் போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற , நள்ளிரவு தமிழ்நாட்டு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தனசேகரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாஜக சார்பில் கடைசி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
கடையடைப்பு போராட்டம்
திருக்கழுக்குன்றத்தில் நேற்று காலை முதல் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம், மேட்டு தெரு, மாமல்லபுரம் சாலை, அடிவார வீதி, சன்னதி தெரு, சதுரங்கப்பட்டினம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் செங்கல்பட்டு நகர் பகுதிகளிலும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதேபோல் திருக்கழுக்குன்றம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்கள்
இச்சம்பவம் தொடர்பாக திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த அகமது பாட்சா (33), மன்சூர் அலி (32), சையது அப்துல் ரகுமான் (33), இப்ராகிம் (35) ஆகிய 4 பேர் இன்று காலை சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்ட பொழுது, இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் சிலர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்தனர். திருக்கழுகுன்றம் பகுதியில் தொடர்ந்து, பல்வேறு வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை முகநூல் வாயில் தெரிவித்து வந்த பாஜக பிரமுகர் தாக்கப்பட்டு இருக்கும் சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.