சென்னை புறநகர் பகுதியில் திருட்டு சம்பவங்கள்

 

சென்னை (Chennai News ): சென்னை புறநகர் பகுதிகளாக இருக்கக்கூடிய மாவட்டங்களான, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்  உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெளியூர் மக்கள்  தங்கி பணிபுரிந்து   வருகின்றனர்.  இவர்களை குறி வைத்து சில மர்ம கும்பல்கள்,  அவர்களுடைய இருசக்கர வாகனங்களை திருடி செல்வது வாடிக்கையாகியுள்ளது. அதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுவது அதிகரித்து வருகிறது.  சிசிடிவி காட்சிகள் இருந்தும், இரு சக்கர வாகனங்களை திருடிச் செல்லும் காட்சிகள் கைப்பற்றப்பட்டும்  இருசக்கர   வாகனங்களை மீட்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இருந்தாலும் அவ்வப்பொழுது இரு சக்கர வாகன, தணிக்கையின் பொழுதும் அல்லது பல்வேறு வகைகளிலும் சிக்கும், திருடர்களை பிடித்து காவல்துறையினர் தக்க நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றனர். பைக்குகளை திருடி இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்த பிரபல பைக் திருடனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

 

திருடு போன பைக்

 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஸ்ரீ பத்மா அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் அப்துல்ரசாக் (19). வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கூடுவாஞ்சேரியில் இருந்து வண்டலூரில் உள்ள கல்லூரிக்கு தனது பைக்கில் தினம்தோறும் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய அவர், வீட்டின் வாசல் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு,  வீட்டிற்கு சென்றார். சில மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தியிருந்த பைக் மாயமானதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து அவர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

 

இன்ஸ்டாகிராமில் விளம்பரத்தை பார்த்து

 

இதில் அவரது பைக் அதே பதிவு எண்ணுடன் விற்பனைக்காக உள்ளது என்று இன்ஸ்டாகிராமில் விளம்பரம் வந்துள்ளது. இதை அப்துல்ரசாக்கின் நண்பர் இன்ஸ்டாகிராமில் விளம்பரத்தை பார்த்து, உடனடியாக அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அப்துல் ரசாக் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் அந்த விளம்பரத்தில் வெளியிட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டனர். அப்போது போனில் பேசிய நபர் அந்த பைக் விற்பனைக்கு மன்னார்குடியில் இருப்பதாக தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தை வாங்குவதுபோல் பேசி மன்னார்குடிக்கு சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த

 பைக்கை பறிமுதல் செய்து அந்த வாலிபரையும் கைது செய்தனர்.

 

20 பைக்குகளை திருடி விற்றதும்

 

பின்னர் இந்த வாலிபரை கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பெயர் முனீஸ்(23), என்பதும் இருசக்கர வாகனங்களை திருடி இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருவதையும், அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் இதுபோன்று தஞ்சாவூர், ஒரத்தநாடு, சேலம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை 20 பைக்குகளை திருடி விற்றதும், இதுகுறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முனீசை போலீசார் நேற்று மாலை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து பைக்கை பறிமுதல்  செய்தனர். மேலும் இதே இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் ,  மற்றொருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.