செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம்  கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் சுமார் 30 பேர் பயணித்திருந்தனர். இந்த நிலையில் மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலை,   கடும்பாடி - மணமை இடைப்பட்ட பகுதியில் , ஆட்டோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மற்றும்  செல்லப்பிராணி  பயணம் செய்து வந்துள்ளனர் .


எதிர்பாராத விதமாக மகாபலிபுரம் மனமை என்ற பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியதில், ஆட்டோவில் பயணித்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இதில் பெண் 2 குழந்தைகள்,3 பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்  உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. சம்பவம் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர்களின் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 




மகாபலிபுரம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி வலது பக்கவாட்டில் திடீரென திரும்பியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன், அவரது மனைவி அமுலு மற்றும் அவரது தாயார் காமாட்சியுடன் கடப்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு தனது இரண்டு பேத்திகளான கனிஷ்கா, ஹரிப்பிரியா மற்றும் மகள் சுகன்யாவையும் அழைத்துக் கொண்டு சென்னை நோக்கி செல்லும்போது இந்த விபத்து நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


2 லட்சம் நிதியுதவி


உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தல 2 லட்சம் நிவாரண நிதியை தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு,




 


''செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம்,எண்.69, மணமை கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (4-5-2023) மதியம் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி சென்ற பேருந்தும் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆட்டோவும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த சென்னை, ஆலந்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த திருமதி.காமாட்சி (வயது 80), திரு.கோவிந்தன் (வயது 60) திருமதி. அமுலு (வயது 50), திருமதி.சுகன்யா (வயது 28), குழந்தைகள் ஹரிபிரியா (வயது 8) மற்றும் கனிஷ்கா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். ''


''உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.'' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.