திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள படூர் பகுதியை சார்ந்த பெண் ஒருவருக்கு, சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை திருமணம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

 



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தவாசி அடுத்துள்ள படூர் கிராமத்திலிருந்து, திருமண பெண் வீட்டார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மினி வேன் மூலம் , சுமார் 25 பேர் வேளச்சேரியை நோக்கி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் , மதுராந்தகம் அடுத்த கருங்குழி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென வேனின் பின்பக்க டயர் வெடித்ததில், அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த வேன் நிலை தடுமாறியது.‌ 



இதனை அடுத்து வாகனம் ஆனது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் பயணித்த கோகுல் ( 14), அஜித் (17) உடல் நசுங்கி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். சபிதா என்ற 12 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.



மேலும் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து உள்ளனர். சிறிய காயம் அடைந்தவர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.‌ இச்சம்பவத்தால், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்காக சென்ற வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.