தொடர் விடுமுறை எதிரொலி

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ): தொடர் விடுமுறை எதிரொலியாக, கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டத்தின் நோக்கி செல்வதற்கு பிரதான சாலியாக இருக்கும் சென்னை -  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது.

 

அதேபோல், விடுமுறை முடிந்து மீண்டும் பிற மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் சென்னை நோக்கி படையெடுத்ததால், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் , வாகன போக்குவரத்து எண்ணிக்கை நேற்று மாலை முதல் சற்று வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது.

 

 


விபத்து நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர்


 

தலைகீழாக கவிழ்ந்தத கார்

 

இந்தநிலையில்,செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அய்யனார் கோவில் அருகே மதுராந்தகம் ஏரி உயர்மட்ட கால்வாய் மேம்பாலம் உள்ளது. அந்தப் பாலத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி, கார் ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது, உயர்மட்ட மேம்பாலத்தின் , சுவரில் மோதி கால்வாயில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பிறந்த மதுராந்தகம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் காரில் சிக்கியவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டனர்.தலைகீழாக கவிழ்ந்ததால் காரில் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

 

போக்குவரத்து பாதிப்பு

 

இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கியது ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு சென்ற கார்  என தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மூன்று ஆண்களில், இருவர் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்கவர், மற்றொருவர் 50 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, உயிரிழந்தவர்களை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



 

தொடரும் விபத்துக்கள்

 

 

சென்னை -- திருச்சி பிரதான சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொத்தேரி பகுதியில் நடைபெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தொழுப்பேடு முதல் தாம்பரம் வரையிலான, தேசிய நெடுஞ்சாலையில்,  இந்த மாதத்தில்  மட்டும் நடைபெற்ற பல்வேறு விபத்துகளில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வாகன ஓட்டிகளில் எதிர்பார்ப்பாக உள்ளது.