செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் இந்தியன் வங்கியில் போலி நகையை அடகு வைக்க முயன்ற ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

செங்கல்பட்டு ( Chengalpattu News ): செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அனுமந்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (47). இவர் அச்சரப்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். மேலும் அச்சரப்பாக்கம் 17வது வார்டு கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்தார். இந்தநிலையில், வடமணி பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரிடம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 100 மூட்டை நெல்லை விற்று உள்ளார். வடிவேல் வடமணி பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ஆவார்.



 

இந்தநிலையில், வடிவேல் கடந்த 6  மாதங்களுக்கு முன்பு, சாராய ஆலை நடத்திய வழக்கில், மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வந்துள்ளார். தற்போது, ஜாமீனில் வெளியே வந்த வடிவேலிடம், நெல் மூட்டைக்கான பணத்தை தர கூறி, பாலசுப்பிரமணியன் கேட்டுள்ளார். இதனால், தன்னிடம் நகை இருப்பதாகவும்,  அவற்றை வங்கியில் வைத்து, தங்களுக்கு தரவேண்டிய பணத்தை எடுத்துக் எடுத்துக்கொண்டு, மீதி பணத்தை தருமாறு பாலசுப்பிரமணியனிடம், வடிவேல் 9 சவரன் நகையை கொடுத்து அனுப்பி உள்ளார்.



 

அச்சரப்பாக்கம் போலீசார் கைது 

 

நகையை அடக்க வைக்க பாலசுப்பிரமணியன் அச்சரப்பாக்கத்தில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு வங்கியின் நகை மதிப்பீட்டாளர் தனசேகர் கொண்டுவரப்பட்ட நகை போலி நகை என உறுதி செய்தார். நகை மதிப்பீட்டாளரிடம் பாலசுப்பிரமணியன் , இது தன்னுடைய நகை இல்லை எனவும், வடிவேல் தான் தனக்கு நகை கொடுத்தார் எனவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். வடிவேல் இடமும் வங்கி மேலாளர் , பார்த்திபன் விசாரணை மேற்கொண்டுள்ளார். இதனை எடுத்து வங்கி மேலாளர் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில், இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அச்சரப்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் அச்சரப்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர்  ஆகிய இருவரும்  போலி நகை  வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது