திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான  குமரேசன் 48 மற்றும் அவரது தம்பி சதீஷ்குமார் 44 ஆகியோர் தங்களது குடும்பத்தாருடன் ஆடி மாதத்தையொட்டி தங்களது குல தெய்வமான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு குமரேசனின் ஆட்டோவில் சென்று விட்டு பின்னர்  ஊர்  திரும்பிய நிலையில்  இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமென்பதினால்  செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அடுத்த பாலாற்றில் அனைவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.



இந்நிலையில் பாலாற்றில் அனைவரும் குதுகலமாக குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் மகள் சிவசங்கரி 16 மற்றும் குமரேசனின் தம்பி சதீஷ்யின் மகள் சிவஸ்ரீ 11ஆகிய இருவரும் பாலாற்று நீரில் மூழ்கி உயிருக்கு போராடி தத்தளித்துள்ளனர். இதனைக் கண்டு அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசனின் உறவினர் ஸ்ரீனிவாசன் 45 என்பவர் நீரில் மூழ்கி தத்தளித்து வந்த இருவரையும் காப்பாற்றச் சென்றப்போது மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 

இதனையடுத்து இது குறித்து உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்புத் துறையினர் பாலாற்று நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆட்டோ ஒட்டுனர் குமரேசனின் தம்பி சதீஷ்யின் மகள் சிவஸ்ரீயின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

 



பாலாற்றில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பல லட்சம் கன அடி நீரானது பாலாற்றில் கரைப் புரண்டோடியும்,தற்போது மழை மற்றும் தடுப்பணைகளிலிருந்து திறந்து விடப்பட்டிருந்த நீர் பாலாற்றில் சென்றுக்கொண்டிருப்பதினால் பாலாற்று படுக்கையின் ஆழத்திலுள்ள சேற்றில் உயிரிழந்தவர்களில் மீதமுள்ள இருவரின்   உடல்கள் சிக்கி இருக்க கூடும் என்ற கோணத்தில் தொடர்ந்து அவர்களது உடலை  மீட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் பாலாற்று கரையோரங்களில் இருவரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் கண்காணித்து உடலை தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.மேலும் இது குறித்து மாமண்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 ஆடி மாதத்தையொட்டி குல தெய்வக் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பியப்போது விடுமுறை தினத்தில் குடும்பத்தாருடன் குதுகலமாக பாலாற்றில் குளித்தப்போது,எதிர்பாராத விதமாக பாலாற்று நீரில் மூழ்கி மூவர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தார் மற்றும் அனைவரிடத்திலும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.