கற்றது தமிழ் படத்தை தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்ததே நான் தான் என நடிகர் கருணாஸ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் ஜீவா, அஞ்சலி, கருணாஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “கற்றது தமிழ்”. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்துக்கு முதலில் தமிழ் எம்.ஏ., என பெயரிடப்பட்டது. அதன்பிறகு வரி விலக்கு காரணமாக கற்றது தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழ் மொழி படித்தவர்களை சமூகத்தில் எப்படி பார்க்கிறார்கள், அவர்கள் வாழ்க்கையில் எந்தளவுக்கு திண்டாடுகிறார்கள் என்பதையும் இப்படம் வெளிச்சம் போட்டு காட்டியது.
பிரபாகராக ஜீவாவும், ஆனந்தியாக அஞ்சலியும் அசத்தியிருப்பார்கள். இயக்குநர் ராமுக்கும், அஞ்சலிக்கும் இதுதான் முதல் படமாகும். ரிலீசான சமயத்தில் இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும் வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து 6 ஆண்டுகள் கழித்து தனது 2வது படத்தை ராம் எடுத்தார். இப்படியான நிலையில் தற்போது கற்றது தமிழ் திரைப்படம் கிளாஸிக் படமாக கொண்டாடப்படுகிறது.
இப்படிப்பட்ட கற்றது தமிழ் படம் ரிலீஸாவதற்கு பெரும்பாடு பட்டது. அப்படிப்பட்ட நிலையில் படம் ரிலீஸாக கருணாஸ் தான் உதவி செய்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய கருணாஸ், “படத்தை வாங்கி தமிழ்நாடு முழுவதும் நான் தான் வெளியிட்டேன். இது நிறைய பேருக்கு தெரியாது. அன்றைய காலக்கட்டத்தில் கிட்டதட்ட ரூ.2.20 கோடி எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. என்னை மாதிரி சின்ன நடிகனுக்கு அன்றைய நேரத்தில் அது எவ்வளவு பெரிய பணம். ஆனால் அன்னைக்கு நான் துணிந்து பண்ணியதால் தான் இன்றைக்கு ராம் என்ற இயக்குநர் அனைவருக்கும் தெரிந்தவராக இருக்கிறார்.
அந்த படத்தில் பணியாற்றிய நடிகை அஞ்சலி, கேமராமேன் கதிர் ஆகியோர் ரசிகர்களுக்கு தெரிந்தார்கள். என்னை மாதிரி நடிகருக்கு இதுதான் ஆத்ம திருப்தியான விஷயம். திறமையானவர்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கேன் என்ற மகிழ்ச்சி தான் இருக்கும். படம் எடுத்தது யாராக இருந்தாலும் வாங்கி ரிலீஸ் பண்ணியிருக்கேன். என்னை மாதிரி எத்தனை சின்ன நடிகர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுவார்களா? ”என தெரிவித்துள்ளார்.