மின் கம்பம்
செங்கல்பட்டு மின்கம்பம் விழுந்து இறந்ததால் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச்சென்ற வழக்கில், எந்த விதமான முன்னேற்றமும் இன்றி போலீசார் திணறி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்ரவாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் நதியா தம்பதியினர்.
இவர்களுக்கு கிருத்திகா என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் மகள் இருந்தார். கிருத்திகா கடந்த ஐந்தாம் தேதி அருகில் உள்ள அவுரிமேடு என்ற கிராமத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகாவின் மீது மின் கம்பம் விழுந்ததில் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காவல் நிலையத்தில் புகார்
சிகிச்சை பலனின்றி கடந்த 14-ஆம் தேதி சிறுமி கிருத்திகா உயிரிழந்தார். இதனை எடுத்து அவரது உடல் சொந்த கிராமத்தில் 15-ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே சம்பவத்தன்று குறிப்பிட்ட மின் கம்பத்தின் மீது ஒரு நபர் ஏறியதாகவும், சிதிலமடைந்திருந்த மின் கம்பம் அதனால்தான் சிறுமியின் மீது விழுந்தது என்றும் சிறுமியின் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
குறிப்பிட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன் அடிப்படையில் புகார் பெற்றுக் கொண்ட சித்தாமூர் போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிய முயற்சிகள் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வழக்கு பதியப்பட்ட நபரின் தரப்பினர், வழக்கை வாபஸ் வாங்குமாறு சிறுமியின் உறவினர்கள், குடும்பத்தாரை பகிரங்கமாக மிரட்டுவதாகப் புகார் எழுந்தது.
மீண்டும் தோண்டப்பட்டது.
இது குறித்தும் சிறுமியின் தரப்பினர் சித்தாமூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில் இரு தினங்களுக்கு முன்னதாக, சிறுமி புதைக்கப்பட்ட இடம் சேதமடைந்திருப்பதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர். இதனையடுத்து மதுராந்தகம் பொறுப்பு டி.எஸ்.பி. துரைபாண்டியன், வட்டாட்சியர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் சிறுமியை அடக்கம் செய்யப்பட்ட இடம் மீண்டும் தோண்டப்பட்டது.
சாமியாரின் வேலையாக இருக்கலாம்!
அப்போது சிறுமியின் சடலத்திலிருந்து தலை மட்டும் துண்டிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அந்த இடத்தில் எலுமிச்சை பழம், குங்குமம் போன்றவை கிடந்ததாலும், அன்று அமாவாசை என்பதாலும் வீட்டின் தலைச்சன் பிள்ளையான கிருத்திகா வின் தலையை மாந்த்ரீக நம்பிக்கை உள்ளவர் எவரேனும் வெட்டிச் சென்றனரா என விசாரணை தொடர்கிறது. குறிப்பாக சம்பவம் நடைபெற்ற அன்று சூரிய கிரகணமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஏதாவது சாமியாரின் வேலையாக என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அல்லது, வழக்கை திசை திருப்பவும், கவனத்தைக் கவர்ந்து பூதாகரமாக்கவும் யாராவது இப்படி செய்துள்ளனரா எனவும் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் இந்த வழக்கில் போலீசார் திணறி வருவதால் மதுராந்தகம் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இது தொடர்பாக காவல்துறையினர் தற்பொழுது இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் காவல்துறையினர் இருவரிடம் விசாரணை மேற்கொண்ட பின்பு, அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.