செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புக்கத்துறை கூட்டுச்சாலை அருகே தபால் மேடு பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியை நோக்கி சென்ற காரில் சென்னை செங்குன்றத்தை சேர்ந்த குடும்பத்தினர் திண்டுக்கல் சென்று கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று நிலை தடுமாறி, சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி, எதிர் திசையை நோக்கி வேகமாக வந்தது.
கொடூர விபத்து, மூன்று பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் நோக்கி சென்ற கொண்டிருந்த கார் மீது அதிவேகமாக மோதியது. இதனால் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த காரில், பயணம் செய்த கார் ஓட்டுநர் கணபதி. சிறுவன் பாலா (10), சிறுமி ஹேமா (13) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிருக்கு போராடி கொண்டு இருந்த மற்ற மூன்று பேரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து, வந்த படாளம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலியில், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து, உயிருக்கு போராடி வருபவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மூன்று பேரின் உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.