மதுரை மாவட்டம் கூடல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (38). இவர் சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை திருவொற்றியூரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அதே காவல் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொசுவம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நித்தியா (35) என்பவரும் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
மேல்மருவத்தூருக்கு பயணம்
இந்தநிலையில் நேற்று விடுப்பில் இருந்த இருவரும் ஒரே புல்லட் இருசக்கர வாகனத்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது அதிகாலை மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் பின்னால் வந்த கார், இருசக்கர வாகனத்தின் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண் காவலர்களும் தூக்கி வீசப்பட்டன. தூக்கி வீசப்பட்ட இரண்டு பெண் காவலர்களும் அருகில் இருந்த, புதரில் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து கொண்டிருந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரை மீட்டனர் .
சம்பவ இடத்தில் உயிரிழப்பு
அப்போது நிகழ்விடத்திலேயே காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மேல்மருவத்தூர் காவல்துறையினர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண் காவலர் நித்தியாவை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
சக காவலர்கள் இடையே சோகம்
இதனை அடுத்து உதவி ஆய்வாளரின் உடலை உடற்குறு ஆய்வுக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கும், பெண் காவலரின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் மதன்குமார் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளரும், பெண் காவலர் உயிரிழந்த நிகழ்வு சக காவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது : ஜெயஸ்ரீ சமூக வலைதள ஊடகமான இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார் என கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் ஜெயஸ்ரீ வைத்து வந்துள்ளார். அவ்வப்போது நண்பர்களுடன் தனது இரு சக்கர வாகனத்தில் லாங் டிரைவ் போவதையும் வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்தநிலையில் மேல்மருவத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த போது இந்த கொடூர விபத்து நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.