மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்று திரும்பி போது நடைபெற்ற விபத்தில்,  ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு வயது சிறுவன் உட்பட  இருவர் உயிரிழந்துள்ளனர்.


குடும்பத்துடன் சாமி தரிசனம்


சென்னை போரூர் வளசரவாக்கம் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்(33). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் சென்னையிலிருந்து, செங்கல்பட்டு மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பிரபல  கோயிலான, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அருகில் இருந்த உணவகத்தில் உணவருந்தி விட்டு,  சென்னைக்கு திரும்ப  காரை எடுத்த பொழுது திடீரென மழை பெய்துள்ளது.




கார் மீது மோதிய லாரி


தொடர்ந்து நள்ளிரவு குடும்பத்தினருடன் சென்னையை நோக்கி  காரில் புறப்பட்டுள்ளனர்.  திருச்சி - சென்னை தேசிய பிரதான சாலையில்,  செங்கல்பட்டு மாவட்டம்  மதுராந்தகம் அடுத்த, படாளம் கூட்ரோடு பகுதியில்  கார் வந்து கொண்டிருந்த போது, பின்னால் சரக்கு ஏற்றி வந்த லாரி  கார் மீது  மோதியதில்  கார் அங்கிருந்து தூக்கி வீசப்பட்டது.


 




இந்த கொடூர விபத்தில்,  காரில் பயணம் செய்த  இரண்டு நபர்கள் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படாளம்  போலீசார்,  உயிரிழந்த இரண்டு நபர்களின்  பிரேதத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு   மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


 இருவர் உயிரிழப்பு 5 பேர் காயம்



இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் உயிரிழந்தவர்கள் மற்றும்  காயமடைந்தவர்களை குறித்து  விசாரித்தனர்.    விசாரணையில் சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்தது தெரிய வந்தது.  உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு வயது  சிறுவன் சச்சின்,  மற்றும்  பார்வதி(70)  என்பதும்,  காயம் அடைந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த ரமணி (52),  சாந்தி(50), வினோத் (33),  புவனா(30),  சிப்பிக்கா (3)  ஆகியோர் காயம் அல்லது தெரியவந்தது.  




 


இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  மதுராந்தகம் முதல் புக்கத்துறை கூட்ரோடு வரை  நள்ளிரவில் தொடர்ந்து விபத்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


 


154 பேரை உயிரை பறித்த  விபத்துக்கள் 



அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட மாவட்டத்தில் , ஜனவரி 1 தேதி முதல் மே 16  வரை அதாவது 136 நாட்களில் , 545 விபத்துக்கள் நடைபெற்று உள்ளது. இதில் பெரும்பாலான விபத்துக்கள் ஆத்தூர் சுங்கச்சாவடியில் இருந்து பரனூர் சுங்கச்சாவடிக்கு இடையிலான பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் 131 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மொத்தம் நடைபெற்ற விபத்தில் 154 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 612 நபர்கள் விபத்தில் காயம் அடைந்துள்ளனர். இதுபோக மறைமலை நகர் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.


 விபத்துக்கள் நடைபெற காரணம் என்ன  ?



திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலில் நடைபெறும் கோர விபத்துகளுக்கு முக்கிய காரணம், பல இடங்களில் கனரக லாரிகள் சாலை ஓரங்களில் நிறுத்துவது, அந்த வாகனத்தில் பின்னால் மோதி விபத்து ஏற்படுவது அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில், கார்களால் ஏற்படும் விபத்துகளும்  அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.‌ அதேபோன்று அதிகாலை நேரங்களில் கவனம் சிதறும் நேரங்களில் இந்த விபத்து ஏற்படுகிறது.