பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் தற்போது 16 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த சிறுமி தன்னுடைய கிராமத்திலிருந்து நகரத்திற்கு சென்று வேலை செய்ய விருப்பமாக இருந்துள்ளதாக தெரிகிறது. 


இதற்காக அந்தச் சிறுமி தன்னுடைய தோழியிடம் உதவி கேட்டுள்ளார். அந்த தோழி அவருக்கு தெரிந்த பெண் ஒருவரிடம் அச்சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அந்த பெண் உத்தரபிரதேச மாநிலத்தின் மதுரா பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களை அந்த சிறுமிக்கு அறிமுகம் செய்து வைத்ததாக தெரிகிறது. மேலும் இவருக்கு போலியாக ஒரு ஆதார் கார்டு ஒன்றை ஏற்பாடு செய்து அவரை இவர்களில் ஒருவருக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. 


அவருக்கு மயக்க மருந்து கொடுத்து சத்தீஸ்கரிலிருந்து கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அச்சிறுமியை இவர்கள் வேலை எதுவும் வாங்கி தராமல் அடைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அச்சிறுமியை வேறு ஒருவரிடம் அனுப்பி வைத்து அவர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சிறுமியின் இருப்பிடம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. 




மேலும் படிக்க: 




அதைத் தொடர்ந்து காவல்துறையினர் அச்சிறுமியை மீட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அச்சிறுமி 80 ஆயிரம் ரூபாய்க்கு அந்த நபர்களிடம் அப்பெண் விற்பனை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பின்னர் அந்த நபர்கள் அச்சிறுமியை வேறு ஒருவரிடம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. 


16 வயது சிறுமியை பெண் ஒருவர் ஏமாற்றி விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அவருடைய குடும்பத்தினர் மத்தியில் பெரும் துயரமாக இருந்துள்ளது. 


உத்தரபிரதேச கூட்டு பாலியல் வன்கொடுமை:


உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி , சிறுமியை கடத்திய மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரம் தூக்கி எறிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தற்போது மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காவல்துறையினர் இந்த வழக்கை விபத்து என திசை திருப்பியுள்ளதாக சிறுமியின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி கவுந்தியாரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் யமுனா பகுதியில் உள்ள கவுந்தியாரா காவல் நிலையத்திற்கு  உட்பட்ட பகுதியில் நடந்திருக்கிறது.


இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவுடன் , உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை விசாரணை செய்துள்ளனர். விசாரணை முடிவில் கவுந்தியாரா காவல் நிலைய காவலர்கள் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.