பாகிஸ்தான் ஆபத்தான அரசியல் சூழலில் உள்ளது. பாகிஸ்தான் அரசின் மீதான தங்கள் பிடியை விட்டுக்கொடுக்க அந்நாட்டு இராணுவம்  விரும்பாத அதே சூழலில், அதன் அதிகாரத்திற்கும் சவால் விடும் வகையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் செயல்பட்டு வருகிறார். பொருளாதாரம் சரிவின் விளிம்பில் உள்ளது. பிராந்திய தேசியவாதம் சீராக உயர்ந்து வருகிறது. தீவிர இஸ்லாமிய உணர்வு அதிவேகமாகவும் பலமாகவும் வளர்ந்து வருகிறது. இந்த காரணிகள் அனைத்தும் அரசின் இயல்பை அச்சுறுத்துகின்றன.


பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி தீவிரம் அடைந்து வருவதால், பணவீக்கம் 24.9 சதவீதமாக உயர்ந்து, இயல்பு வாழ்க்கையை நடத்த மக்கள் போராடி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி இப்போது எதிர்ப்புகளாக வெளிப்படுகிறது. கடந்த சில வாரங்களாக, எரிபொருள் விலை மாற்றம் மற்றும் மின் கட்டணங்கள் மீதான வரிகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


இந்த நெருக்கடியின் மத்தியில், ஊழல் மற்றும் ராணுவம் அரசியலில் தலையீடுவது பற்றிய பிரச்னைகளை மக்கள் மத்தியில் எழுப்பி அவர்களை ஒன்றிணைந்துள்ளார் இம்ரான் கான். அரசியலில் தங்கள் இராணுவத்தின் தலையீடு மற்றும் ஜெனரல்கள் பாகிஸ்தானின் பிற தன்னாட்சி நிறுவனங்களைத் மட்டுபடுத்துவதன் மூலம், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதை மக்கள் இப்போது நம்புகிறார்கள்.


1947 முதல், நாட்டின் தலைவிதியை வடிவமைப்பதில் பாகிஸ்தான் ராணுவம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 75 ஆண்டுகளில், அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இராணுவ சர்வாதிகாரிகளின் கீழ் நேரடியாக ஆட்சி செய்துள்ளனர். இருப்பினும், மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஆட்சியில் இருந்தபோதும் பாகிஸ்தான் ராணுவம் தனது பிடியை இழக்கவில்லை. உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழலை திறமையாக நிர்வகிப்பதில் அவர்கள் எல்லா நேரங்களிலும் வெற்றி பெற்றனர். 


இஸ்லாம், காஷ்மீர் மற்றும் பயங்கரவாதத்தை தங்கள் புவிசார் மூலோபாய நன்மைக்காக ராணுவ ஜெனரல்கள் பயன்படுத்தினர். அவர்கள் மேற்கத்திய உதவியில் பில்லியன் கணக்கான டாலர்களைப் பெற முடிந்தது. கடன் வாங்கிய பொருளாதாரத்தில் பாகிஸ்தான் முன்னேறியது. இதுவரை, இந்த பொருளாதார மாதிரி வேலை செய்தது. ஆனால், இனி, அப்படி நடக்க போவதில்லை.


ராணுவ தலைமைக்கு மத்தியில் நிலவும் அமைதியின்மை


இனி, மேற்கத்திய நாடுகளுக்கு பாகிஸ்தான் ஒரு முக்கிய நாடாக இருக்க போவதில்லை. அதன், புவிசார் அரசியல் பொருத்தம் குறைந்து, நிலையான வளர்ச்சி இயந்திரங்கள் இல்லாத மற்ற நாடுகளின் உதவியை நம்பியே உள்ள பாகிஸ்தான் தற்போது வேகமாக சரிந்து வருகிறது.


ராணுவத்தின் பிடி தளர்ந்து வருவதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிக்கு கணிசமான அனுபவ ரீதியான காரணங்களை இம்ரான் கான் வழங்குவதால், தெருக்களில் மக்கள் இம்ரான் கானை ஒரு ஆபத்பாந்தவன் கருதுகிறார்கள். சூழல் மாறி வரும் நிலையில், ​​பாகிஸ்தானின் இராணுவ உயரடுக்கிற்குள் ஒரு குழப்ப உணர்வு நிலவுகிறது. முன்னதாக, அவர்கள் ஒருபோதும் நிச்சயமற்றதாக உணர்ந்ததில்லை.


முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மக்கள் ஆதரவை எதிர்கொள்ள இம்ரான் கான் இராணுவத்தால் தலைவராக முன்னிறுத்தப்பட்டார். நவாஸின் மிகப்பெரிய தவறு என்னவென்றால், அவர் அதிகார வர்க்கத்திற்கு சவால் விடுத்து லக்ஷ்மண ரேகையை மீறிவிட்டார். இது அவரது எதிரிக்கு போதுமான காரணமாக அமைந்தது.


ஸ்தாபனத்தின் ஆதரவுடன் உள்ல பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அரசாங்கம் இம்ரான் கான் விவகாரத்தில் இக்கட்டான நிலையில் உள்ளது. அவர் ஸ்தாபனத்தின் அதிகாரத்திற்கு எதிராக வெளிப்படையாக சவால் விடுவதால், அவர்களுக்கு மிகக் குறைந்த விருப்பங்களே உள்ளன. இம்ரான் கானை கைது செய்தால் பாகிஸ்தானில் சூழல் பதற்றமாக மாறும். கைது செய்யாவிட்டால் பாகிஸ்தானை இம்ரான் கான் பதற்றம் ஆக்குவார். 


இம்ரான் கான் vs பாகிஸ்தான் ராணுவம்


பாகிஸ்தானின் இன்றைய நிலையில், அந்நாட்டின் மிகவும் பிரபலமான தலைவர் இம்ரான் கான். பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கத் தவறிவிட்டது மற்றும் பொருளாதாரம் சுழல் மூழ்கி உள்ளது. பஞ்சாப் மற்றும் கராச்சியில் நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளது.


அரசியலில் தலையிட்டதால் இராணுவத்தை குறிவைத்து, அனைத்து தீமைகளுக்கும் அவர்களை நேரடியாக பொறுப்பாக்கி உள்ளார் இம்ரான் கான். அவரது பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பாகிஸ்தான் முன் எப்போதும் இல்லாத வகையில் ஸ்தாபனத்திற்கு எதிரான உணர்வுகளைக் கண்டுள்ளது.


பலுசிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கார்ப்ஸ் கமாண்டர் XII கார்ப்ஸ் லெப்டினன்ட் ஜெனரல் சர்ஃபராஸ் அலி உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இம்ரானின் ஆதரவாளர்களிடையே வருத்தத்தையோ மகிழ்ச்சியோ ஏற்படுத்தவில்லை.


இந்த மாற்றம் பாகிஸ்தான் மக்களின் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குணாதிசயத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. அவர்கள் எப்போதும் தங்கள் இராணுவத்தின் பின்னால் அணிதிரள்வார்கள். 


தனது தலைமைப் பொறுப்பில் இருந்தால் மட்டுமே பாகிஸ்தான் ஒரு வளமான மற்றும் சுயமரியாதையுள்ள நாடாக மாற முடியும் என்ற கனவை இம்ரான் கானால் மக்களிடம் விற்க முடிந்தது. பாகிஸ்தானை ஆளும் விதங்களில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.


உண்மை என்னவென்றால், ராணுவத்தில் ஒரு பிரிவினர் இடையே இம்ரானுக்கு வலுவான ஆதரவு உள்ளது. ஜெனரல் பஜ்வா சமீபத்தில் தனது ஆட்களை அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரித்திருந்தார். ராணுவத்திலேயே இம்ரான் கானுக்கு ஆதரவு பெருகி வருவதால், இராணுவம் ஒரு பிளவுபட்ட அமைப்பாக மாறி உள்ளது. இராணுவ பிரிவினருக்கிடையே இம்ரானுக்கான இந்த ஆதரவுத் தளம்தான் அதிகார வர்க்கத்தை தீவிரமாகக் கவலை கொள்ள செய்துள்ளது. இம்ரானின் மக்கள் ஆதரவை கையாள்வதில் தளபதிகள் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையும் நீதித்துறையும் நெருங்கிய உதவியாளரை தடுத்து வைத்து சித்திரவதை செய்ததாக அவர் குற்றம் சாட்டியதை அடுத்து இம்ரான் கான் மீது விசாரணை நடந்து வருகிறது.


இம்ரான் ஒரு தடைக்கல்லா அல்லது பாகிஸ்தானை மிக பெரிய அரசியல் நிலையற்ற தன்மையை நோக்கி அவர் தள்ளுவாரா, மக்கள் புரட்சிக்கு வித்திடுவாரா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


(இந்த கட்டுரையை எழுதியவர் Colonel Danvir Singh (Retd). இதில் சொல்லப்பட்ட கருத்துகள் அவரின் தனிப்பட்ட கருத்து. இதற்கு ஏபிபி நிறுவனம் பொறுப்பேற்காது)