பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அருளாணந்தத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி கூடுதலாக வழக்கை 6 மாதத்துக்குள் விரைந்து முடிக்கவும் கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே தற்போது கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபி ஐ தரப்பு தாக்கல் செய்துள்ளது.


முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.


2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.


இந்த வழக்கு விசாரணையானது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தற்போது வரை 9 பெண்கள் தாமாக முன் வந்து புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு அண்மையில் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஏற்கெனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.




சிபிஐ தரப்பில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அருளானந்தத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்கத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை நியமித்து உதவத் தயாராக இருப்பதாகவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு, சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.


இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய  அருண் குமார் (29) என்ற நபரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அருண்குமாரை இன்று மாலை கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர். சிபிஐ அதிகாரிகளின் இந்த நடவடிக்கையின் மூலம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பொள்ளாச்சி கிட்ட சூரம்பாளையம் பகுதியை சேர்ந்த அருண்குமார், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இரண்டாவது குற்றவாளியான சதீஷ்குமாரின் தொழில் பார்ட்னராக இருந்துள்ளார். வழக்கை விரைந்து முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளதை காட்டும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.