சிபிசிஐடி டிஜிபியாக உள்ள ஷகில் அக்தர் ஐபிஎஸ் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், பல்வேறு முக்கியமான வழக்குகளை விசாரித்துவரும் சிபிசிஐடி போலீசாருக்கு புதிய தலைவராக யார் நியமனம் செய்யப்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு காவல்துறை வட்டாரத்தில் எகிறியுள்ளது.


சிறப்பு பிரிவுகளில் முக்கியமான சிபிசிஐடி


தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கை தவிர்த்து பல்வேறு சிறப்பு பிரிவுகள் உள்ளன. உதாரணமாக, ஆயுதப்படை பிரிவு, கடலோர காவல்படை, குற்றப்பிரிவு, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு, சைபர் க்ரைம், சீருடை பிரிவு, தீயணைப்பு மற்றும் மீட்பு படை உள்ளிட்ட பல பிரிவுகள் அதற்கென தனி ஐ.பி.எஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை தலைமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 


ஓய்வு பெறும் ஷகில் அக்தர் - புதிய டிஜிபி யார் ?


அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு பிரிவு சிபிசிஐடி என்ற மாநில அரசின் சிறப்பு குற்ற புலனாய்வு துறை. தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறையால் மேல் விசாரணை செய்ய முடியாத வழக்குகள் / பிரச்னைக்குரிய வழக்குகள் / முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் சிபிசிஐடி போலீஸ்க்கு மாற்றப்படுவது வழக்கம். அந்த பிரிவிற்கு அனுபவமும் திறமையும் வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரியே இதுவரை டிஜிபியாக நியமிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், தற்போதைய டிஜிபியாக இருக்கும் ஷகில் அக்தர் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், சிபிசிஐடி போலீஸ்க்கு புதிய டிஜிபியாக யாரை தமிழ்நாடு அரசு நியமிக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.



சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர்


 


சிபிசிஐடியை பொறுத்தவரை, இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது. முதல் பிரிவை பொறுத்தவரை, ஆயுதங்கள், வெடிபொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது, சர்வதேச குற்றவாளிகள் தொடர்புடைய வழக்குகள், மோசடி, போதை பொருட்கள் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான வழக்குகள் கையாளப்படுகிறது. இரண்டாவது பிரிவில் கொலை, கொள்ளை, திருட்டு, அரசியல் ஆதாய குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.  தற்போது தமிழ்நாட்டில் மிக முக்கியமான வழக்குகளை கையாண்டு வரும் சிபிசிஐடி போலீசாருக்கு தலைவராக நியமிக்கப்படப்போகும் நபர் யார் என்ற கேள்வி காவல்துறை வட்டாரங்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது.


இறுதிப்பட்டியலில் இரண்டு அதிகாரிகள்


அந்த வகையில், இந்த பொறுப்புக்கு அபய்குமார் சிங் ஐபிஎஸ், மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் ஆகிய இருவரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இருவரில் ஒருவர் சிபிசிஐடி தலைவராக நியமிக்கப்படவிருப்பதாகவும் டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஏடிஜிபி அபய்குமார் சிங் IPS


தற்போது அபய்குமார் சிங் ஆயுத படைபிரிவு ஏடிஜிபியாகவும், மகேஷ்குமார் அகர்வால் குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும் உள்ளனர். சிபிசிஐடி இயக்குநர் பதவி டிஜிபி அந்தஸ்தில் இருப்பவரே நியமிக்க முடியும் என்றாலும் இந்த இருவரும் ஒரு சில மாதங்களில் டிஜிபி அந்தஸ்துக்கு பதவி உயர்த்தப்படவிருப்பதால், இருவரில் ஒருவர் சிபிசிஐடி இயக்குநராக நியமிக்கப்படுவது உறுதி என டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்


அதனடிப்படையில், தற்போது ஆயுதபடைப்பிரிவு ஏடிஜிபியாக இருக்கும் அபய்குமார் சிங்கிற்கு சிபிசிஐடி இயக்குநர் ஆகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கரூர் காகித நிறுவன கண்காணிப்பு அதிகாரி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி என்று அதிமுக்கியமற்ற துறைகளை கவனித்து வந்த அபய்குமார் சிங்கை சிபிசிஐடி இயக்குநராக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ்குமார் அகர்வாலும் இந்த போட்டியில் இருந்தாலும் விரைவில் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.