ஓடும் ரயில் முன் பெண் ஒருவரை சைக்கோ நபர் ஒருவர் தள்ளிவிட சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.


பெல்ஜிம் நாட்டின் தலைநகர் ப்ருசல்ஸ். அங்குள்ள ரோஜியர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.


நடந்தவை அனைத்து அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. உடம்பில் உள்ள முடிகளெல்லாம் சிலிர்க்கச் செய்யும் அந்த வீடியோ பெல்ஜியம் நாட்டின் RT இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 


அந்த வீடியோவில் ரோஜியர் மெட்ரோ ரயில் நிலைய நடை மேடையில் ஒரு ஆண் அங்குமிங்குமாக நடந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. அவர் ஏதோ பதற்றத்தில் இருப்பதுபோல் தெரிகிறது. அப்போது தூரத்தில் ரயில் வருகிறது. உடனே அந்த நபர் அங்கிருந்த பெண் ஒருவரை ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிடுகிறார். உடனே பதறிப்போன பயணிகள் அந்தப் பெண்ணுக்கு உதவ முயல்கின்றனர். நல்ல வேளையாக ரயில் ஓட்டுநருக்கு எமர்ஜென்சி பிரேக்கை அழுத்த ரயில் தன்னை நெருங்கும் விநாடிகளுக்கு முன் அப்பெண் மேடையில் ஏறி விடுகிறார்.






இது குறித்து தி ப்ரூஸல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில், ரயில் ஓட்டுநர் மிகவும் சாதுர்யமாக நடந்து கொண்டார். ஆனால், அந்தப் பயணியைப் போலவே ஓட்டுநரும் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார். அந்தப் பெண்ணும், மெட்ரோ ரயில் ஓட்டுநரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இதற்கிடையில், பெண்ணைத் தள்ளிவிட்டு தப்பியோடிய நபரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. விசாரணைக் குழுவில் மனநல மருத்துவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த சில நிமிடக் காட்சிகள் சைக்கோ த்ரில்லர் படத்தைப் போன்ற அனுபவத்தைத் தந்துள்ளது. சைக்கோ த்ரில்லர் படங்களில் ரயில் நிலையக் காட்சிகளை நினைவுக்குக் கொண்டு வந்தது.


மிஷ்கின் இயத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்தப் படத்தில் ரயில் நிலையத்தில் இருந்துதான் வில்லன் நாயகியைக் கடத்திச் செல்வான். அதேபோல் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தில் வில்லன் அவரை ரயில் நிலையத்தில் துரத்தும் காட்சி ரொம்பவே த்ரில்லிங்காக இருக்கும். திரையில் வரும் காட்சிகள் நிழல் என்பதால் நம்மால் அந்த பரபரப்பை ரசிக்க முடிந்தது. ஆனால், இந்தச் சம்பவம் நிஜம் என்பதால் காண்போரைக் கதி கலங்க வைக்கிறது.