மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் மதகடி பேருந்து நிறுத்தத்தில் கடந்த 6ஆம் தேதி அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கரின் திருவுருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவதற்கான நிகழ்ச்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஜாதி மோதல் ஏற்பட வழிவகுக்கும் என்று கூறியதால் பட்டவர்த்தி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சமூகத்தினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மோதலை தொடர்ந்து இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். உடனடியாக கலவரம் ஏற்படாதவாறு போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடையும், மற்ற கடைகளும் அடைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஐந்து பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இரு சமூகத்தினரும் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக இரு சமூகத்தினர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாதியை தரக்குறைவாக பேசி டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தக்கூடாது என கூச்சலிட்டு கொலைமிரட்டல் விடுத்ததாக ஒரு சமூகத்தை சேர்ந்த பாலமுருகன், பிரபு, இரண்டு பெண்கள் உட்பட 11 பேர் மற்றும் பலர் மீது 147, 148, 294 (b), 324, 506(ii) மற்றும் வன்கொடுமை தடுப்புசட்டம் (SC/STAct) ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இதேபோல் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈளவளவன், பாரதிவளவன், உள்ளிட்ட 7 பேர் மற்றும் பலர் மீது 147, 148, 294(b), 324, 506(ii) பிரிவுகளிலும் மேலும் இவர்கள் மீது அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்ததாக தலைஞாயிறு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரிலும் மணல்மேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இது தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த தலா 4 பேர் வீதம் 8 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் மேலும் தலைமறைவாக உள்ள பலரை தேடி வருகின்றனர்.